காங்கிரஸ் ஆட்சியை தேவன் கவிழ்த்து போபோடுவார் !!!
இந்திய அரசியலில் ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பு விவகாரம் எந்த அளவிற்கு, பாரதூர நிலமையை உருவாக்கியுள்ளது என்பதை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் உணர்த்துகின்றது.
அத்துடன், தேர்தல் வெற்றிக்காக எப்படியெல்லாம் தம்மால் 'அந்தர் பல்டி' அடிக்க முடியும் என்பதையும் இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை புரிய வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
- கரிகாலன்இந்திய தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி நேற்று, புதன்கிழமை வெளியிட்ட தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில், நாட்டு மக்களுக்கான பல்வேறு திட்டங்களையும், வாக்குறுதிகளையும் தெரிவித்துள்ளது.
அதில், 'இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், அதற்காகத் தாம் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட உள்ளதாகவும்' தெரிவித்துள்ளது.
இலங்கைத் தீவில் நடைபெற்ற இறுதி யுத்தத்திலும், அதன் பின்னரான காலப் பகுதியில் அனைத்துலக குற்றச்சாட்டுக்களிலிருந்து சிறிலங்கா ஆட்சியாளர்களைக் காப்பாற்றுவதிலும் இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் வழங்கிய பங்களிப்பு அபரிதமானது என்பதை உலகம் நன்றாகவே புரிந்து வைத்துள்ளது.
சிறிலங்கா மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும், மேற்குலகுக்கும் உள்ள மிகப் பெரிய தர்ம சங்கடம் இந்த யுத்தக் குற்றச்சாட்டிற்குள் இந்தியாவையும் இழுத்து விட முடியாத நிலை. திறந்த பொருளாதாரம் வழங்கியுள்ள இந்தியா சார்ந்த மிகப் பெரிய சந்தை வாய்ப்பை இழந்துவிட விரும்பாததே இதற்குக் காரணம்.
இலங்கைத் தீவில் ஆயுத மோதல் ஒன்றை ஊக்குவித்ததுsம், தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியதும், ஆயுதங்களைக் கொடுத்ததும் இதே காங்கிரஸ் கட்சிதான்.
பின்நாட்களில், தமது இலக்கை அடைந்துவிட்ட திருப்தியுடன், அதே தமிழ் இளைஞர்களுடன் போர் தொடுத்ததும், தமிழீழ மண்ணில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலி கொள்ளப்பட்டதும், பல நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதும் இதே காங்கிரஸ் கட்சியினால்தான்.
தமிழீழ மண்ணில் நடாத்தப்பட்ட இறுதிக் கட்டப் போரின்போது, சிங்கள ஆட்சியாளர்களுக்கு வேண்டிய அத்தனை வளங்களையும் வழங்கி, அந்தப் போரை நெறிப்படுத்தி, தமிழின அழிப்பை முற்றாக நடாத்தி முடிக்கும் அங்கீகாரத்தையும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு வழங்கியதும் இதே காங்கிரஸ் கட்சிதான்.
விடுதலைப் புலிகளைப் பழிவாங்கியே தீரவேண்டும் என்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வெறித்தனமான ஆசை, தமிழீழ மக்களது அவலங்களுக்கும், பேரழிவுக்கும் காரணமாக இருந்தது.
இதனையே சிங்கள அரசின் ஜனாதிபதி முதல், அமைச்சர்கள் வரை, 'இந்தியாவின் போரையே நாங்கள் நடாத்தினோம். இந்தியாவின் உதவி இல்லாமலிருந்திருந்தால், இந்தப் போரை நாங்கள் வெற்றி கொண்டிருக்க முடியாது' என்று பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நன்றியுடன் தெரிவித்திருந்தார்கள். அதனை, காங்கிரஸ் ஆட்சியாளர்கள் என்றுமே நிராகரித்தது கிடையாது.
ஆனால், ஈழத்தின் இறுதிப் போரில் இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் வகித்த பாகம், தமிழக மக்கள் மனதில் அவர்கள்மீது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அது காங்கிரஸ் கட்சிக்கு வெகுவாகவே உணர்த்தப்பட்டது. இருந்த போதும், அவர்களது குருட்டு நம்பிக்கை அவர்களது போக்கில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை.
யுத்தப் பேரழிவின் பின்னர், அழிவுகளை எதிர்கொண்ட தமிழ் மக்களுக்காகக் கட்டிக்கொடுத்த வீடுகளும், போட்டுக் கொடுத்த ரயில் பாதைகளும் தமிழகத்தில் தங்களை மீண்டும் தூக்கி நிறுத்திவிடும் என்று காங்கிரஸ் கட்சியினர் நம்பினார்கள். அதனையே பல சந்தர்ப்பங்களிலும் தெரிவித்து, தங்களது கொடுஞ்செயல்களை நியாயப்படுத்த முனைந்தார்கள்.
அந்த நம்பிக்கையுடனேயே, ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனையை எதிர்கொண்டிருந்த மூவர் உட்பட்ட எழுவரது விடுதலைக்கும் எதிராக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் எதிர்த்து மேன்முறையீடு செய்தார்கள்.
ஈழத் தமிழர்களுக்கெதிரான காங்கிரஸ் கட்சியின் கொடூரமான அணுகுமுறைகளை தமிழகம் மிகத் தாமதமாகப் புரிந்து கொண்டதனால், காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் அநாதரவாகிப் போனது.
எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேர முடியாத நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் எல்லாம் தேர்தலில் போட்டியிடாமல் விலகிக்கொண்டார்கள். தமிழக மக்களது கோபத்தைத் தாண்டி தி.மு.க.வினாலும் இறுதிவரை அவர்களுடன் கரம் கோர்க்க முடியவில்லை.
தமிழகத்தில் கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சி போன்றே தி.மு.க.வும் தமிழ் மக்களது அதிருப்திக்குள்ளான கட்சியாகவே உள்ளது. கலைஞர் கருணாநிதி அவர்களது வார்த்தையில் சொல்வதானால், தற்போது 'சகோதர யுத்தம்' ஒன்று திராவிட முன்னேற்றக் கழகத்தை மிக மோசமாகப் பாதித்துள்ளது.
தமிழகத்தில், ஐந்து முனைப் போட்டி இருப்பது மட்டுமே தி.மு.க. தலைவரது இறுதி நம்பிக்கையாக உள்ளது. இதற்காக, காங்கிரஸ் கட்சியுடன் சமரசம் செய்து கொள்ள கலைஞர் முடிவெடுத்துவிட்டார் என்பதை அவரது அறிவிப்பு உறுதி செய்துள்ளது.
காங்கிரஸ்காரர்கள் நாளைக்கு மனம் வருந்தினால், அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதுடன், மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குவோம்;' என்று கலைஞர் கருணாநிதி அறிவித்து 24 மணித்தியாலங்களுக்குள் காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஈழத் தமிழர் விவகாரமும் இணைக்கப்பட்டுள்ளது.
அதாவது, கலைஞர் கருணாநிதி அவர்கள் காங்கிரசுடன் மீண்டும் கைகோர்ப்பதற்குத் தடையாக இருந்த 'ஈழத் தமிழர் விவகாரம்' இந்தத் தேர்தல் அறிக்கை மூலம் திருத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கையும் ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளதாக, அவர்களை நோக்கித் திருப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதையும் அரசியலாக்கி, அதில் தனது குடும்ப இலாப நட்டங்களை மட்டுமே கணக்கிடும் தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் ஈழத் தமிழர்களது இன அழிப்பு விவகாரத்தையும் அரசியலாக்கி, காங்கிரஸ் கட்சி ஊடாக இலாபத்தைக் காண முயற்சிக்கின்றார்.
காங்கிரஸ் கட்சியோ, தமிழகத்தில் இல்லாமல் போன செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த ஈழத் தமிழர் விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. இதைத் தவிர, இனஅழிப்பின் சூத்திரதாரர்களான இந்த இரு தரப்பாலும் ஈழத் தமிழர்களுக்கு எந்த நல்லதும் நடந்துவிடப் போவதில்லை.