தமிழ்த் தேசியத்திற்கு பேரிழப்பு ஓவியர் சந்தானம் அவர்களின் மறைவு
தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர், தூரிகையாளர், மாந்தநேயமிக்கவர் என பன்முகங்களைக் கொண்ட ஓவியர் வீரசந்தானம் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு தமிழ் உணர்வாளர்களும், அரசியல்கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஓவியர் வீரசந்தானம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் "ஓவியர் வீரசந்தானம் அவர்கள் நேற்று மாலை (13-07-2017)திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலமானார் என்னும் தகவல் பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. அவர் நாடுபோற்றும் தலைசிறந்த ஓவியப் படைப்பாளர். கண்ணைக் கவரும் கலைநயம் சிந்தும் கருத்தாழம் மிக்க கோட்டோவிங்களைப் படைப்பதில் வல்லவர். அவர் ஒரு ஓவியக் கலைஞராக மட்டுமின்றி, அதிதீவிரமான தமிழ்த்தேசிய உணர்வாளராக, துணிவாகக் களமிறங்கிச் செயலாற்றும் போராளியாக விளங்கியவர். தமிழுக்காகவும் தமிழினத்துக்காகவும் உரத்துக் குரலெழுப்பியவர். தமிழ்நாட்டுக்காகவும் தமிழீழத்துக்காகவும் சமரசமின்றி ஓயாது போராடியவர். விடுதலைப்புலிகளை ஆதரிப்பதில் மிகவும் உறுதியாக இருந்தவர். இந்திய அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடியவர். தமிழ்நாட்டை தனிநாடாக வென்றெடுக்க வேண்டுமென்னும் கருத்தை ஓங்கி முழங்கியவர். தமிழ்த்தேசியப் போராட்டக் களத்தில் எப்போதும் முன்னணியில் நின்றவர். உலகத்தமிழர்களின் நம்பிக்கைக்குரியவர். விடுதலைச்சிறுத்தைகள் முன்னெடுத்த "தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின்" அனைத்துப் போராட்டக் களங்களிலும் மிகவும் தீவிரமாகப் பங்கேற்றவர். சிங்கள இனவெறியர்கள் நடத்திய இனப்படுகொலையின் பேரவலத்தைச் சித்தரிக்கும் 'முள்ளிவாய்க்கால் முற்றம்' என்னும் நினைவிடத்தை அமைப்பதில் பெரும் பங்காற்றியவர். அவருடைய இழப்பு தமிழ்த்தேசியக் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என குறிப்பிட்டுள்ளார்.