வெல்லும் தமிழீழம்: – மே17

வெல்லும் தமிழீழம்: – மே17

இலங்கை இனப்பிரச்னை குறித்தான விவாதம் வருகிற மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெறவிருக்கிறது. இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில், லட்சக்கணக்கிலான ஈழத் தமிழர்களை ராணுவம் கொன்றொழித்தது. இந்த இன அழிப்பு குறித்தான விவாதங்களை ஐ.நா மனித உரிமை ஆணையம் நடத்தி வருகிறது. ஆனால், இலங்கையில் இனஅழிப்பு நடத்தப்பட்டதையும், தமிழர்களுக்கான உரிமை பறிக்கப்பட்டு வருவதையும் ஐ.நா மனித உரிமை ஆணையம் இன்றுவரை ஏற்க மறுக்கிறது.

அங்கு நடந்தது போர்க்குற்றம்கூட அல்ல என்று உலகநாடுகளை இந்தியா, அமெரிக்கா, சீனா, இலங்கை ஆகிய நாடுகள் நம்பவைத்து வருகின்றன. வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கிற ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இதுகுறித்த விவாதங்களை எழுப்பப் போகிறோம்” என்கிறது மே-17 இயக்கம். இந்த விஷயத்தில் உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இலங்கையில் தமிழீழம் மலர வேண்டும் என்றால், அது அனைத்துத் தமிழர்களும் சாதி, மதம் கடந்து ஒன்றிணைந்து குரல்கொடுத்தால் மட்டுமே சாத்தியம். இதற்காக தமிழர்களை ஒன்றிணைக்கும் முன்னோட்டமாக தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு சென்னைச் சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. 18-02-2018 அன்று ‘வெல்லும் தமிழீழம்’ என்ற பெயரில் இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்தியது மே17 இயக்கம்.

நான்கு கட்ட அமர்வுகளாக மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி தொடங்கி வைத்தார். தமிழீழம் அமைய வேண்டி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி மாநாடு தொடங்கப்பட்டது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெஹலான் பாகவி, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, இயக்குநர் அமீர், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்களும், சட்டப் பேராசிரியர்களுமான யொரெம்பே முடும் மற்றும் மாலேம் மங்கள் ஆகியோர் கலந்துகொண்டு தமிழீழ விடுதலைப் பற்றி உரையாற்றினார்கள்.

‘தமிழீழம் பற்றிய கனவு ஒரு போதும் ஓயாது’ என்பதை அப்பட்டமாகக் காட்டியது இந்த மாநாடு. காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட மாநாடு இரவு 9 மணிக்கு அதாவது 12 மணிநேரத்தில் முடிக்கப்பட வேண்டும். ஆனால், மாநாடு முடிய இரவு 11.30 மணியைத் தாண்டியது. சரியாகச் சொன்னால், 14.30 மணி நேரத்துக்கும் மேலாக இந்த மாநாடு நடைபெற்றது. அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகளைவிட அதிகமாக, மக்கள் கூட்டம் அலைமோதியது. உண்மையைச் சொன்னால் மாநாடு நடந்த அந்த 14.30 மணி நேரமும் அரங்கத்தினுள் அமர இருக்கைகள் போதவில்லை. அதனால் அரங்கத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எண்ணற்றவர்கள் நின்றுகொண்டே மாநாட்டு உரைகளைக் கேட்டுக்கொண்டிருந்தனர். தற்போதைய காலகட்டத்தில் இப்படி ஒரு பிரமாண்டமான மாநாட்டை அரசியல் கட்சிகள்கூட நடத்தமுடியாது என்பதுதான் உண்மை.

தெற்காசியப் பிராந்தியத்தில், இந்தியாவின் விரிவாதிக்கக் கொள்கையும், தமிழீழ விடுதலையின் முக்கியத்துவமும். முற்போக்கு ஜனநாயக அரசியலை வென்றெடுத்த தமிழீழ அரசியல் சாசனம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சமூகநீதியும், தமிழ்நாட்டின் எதிர்வினையும். தமிழீழ விடுதலைக்கான அரசியல் நகர்வுகளும், நம் உடனடி கடமைகளும் என்பது போன்ற தலைப்புகளில் கருத்துகள் ஆலோசிக்கப்பட்டன. சமூக வலைதளங்களில் போராடுவதை விடுத்து உரிமையைக் காக்க வீதிக்கு வாருங்கள் என்று திருமுருகன் காந்தி மக்களுக்குக் கோரிக்கை விடுத்தார்.

காசி ஆனந்தன்

மாநாட்டில் பேசிய கவிஞர் காசி ஆனந்தன், “தமிழீழத்தை மீட்டெடுக்க வேண்டுமானால், உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். ஜாதி, மதம் என்பதை மறந்து நாம் அனைவரும் ஒரே இனம் என்ற எண்ணத்தில் போராடினால் மட்டுமே தமிழீழம் சாத்தியமாகும்” என்றார்.தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியபோது, “ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று ஏற்க மறுப்பவர்களும், புலிகளுக்கு ஆதரவு அளிக்காதவர்களும் இந்த தமிழ் மண்ணில் நிலைத்து நிற்க முடியாது. எம்மினம் அழிந்தபோதும், எம்மினத்தை பிற மாநிலக்காரர்கள் தாக்கியபோதும் வாய் திறக்காதவர்கள் எல்லாம் இன்று எம்மினத்தை ஆள நினைக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தைரியம் இருக்கிறது? தமிழ் மாநில பிரச்னைகளுக்கு வாய் திறக்காதவனெல்லாம் இங்கு சூப்பர் ஸ்டார். வெட்கப்பட்டுக்கொள் தமிழினமே” என்றார்.

மாநாட்டில் பேசிய திருமுருகன் காந்தி ” ‘வெல்லும் தமிழீழம்’ என்ற இந்த முழக்கத்தைச் சொல்லும்போது இந்திய அரசு அஞ்சுமேயானால், மீண்டும் மீண்டும் சொல்வோம் ‘வெல்லும் தமிழீழம்’ என்று. இன்னும் எத்தனை காலத்துக்குதான் இனப்படுகொலை நடந்துவிட்டது எனப் பேசப்போகிறோம். வெறும் சமூக வலைதளங்களில் படங்களைப் பகிர்வதோடு நம்முடைய கடமை நின்றுவிடக் கூடாது. அடுத்து என்ன செய்தால் தமிழீழம் மலரும் என்று சிந்தித்து அடுத்தகட்டத்துக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எப்படி காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் விவாதப் பொருளாக மாறியதோ? அதுபோல தமிழீழமும் இந்தியாவின் விவாதப்பொருளாக மாற வேண்டும். அதற்கான முயற்சியை நாம்தான் எடுக்க வேண்டும். இந்தியாவிலுள்ள தேசிய இனத் தலைவர்கள், பல தேசிய இனமக்கள், இந்திய ஊடகம் என அனைத்துத் தரப்பினரும் தமிழீழத்தை விவாதப் பொருளாக எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்திய மக்களுக்கு இலங்கையில் நடந்த இனப்படுகொலை தெரியும். இந்தியா என்ற ஒரு நாடு இனத்துக்குச் செய்த மிகப்பெரிய துரோகத்தை இந்திய மக்கள் மட்டுமல்ல… தெற்காசிய நாடுகளில் உள்ள அனைத்து மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும். கடந்த 9 வருடங்களாக தமிழர்கள் குற்ற உணர்ச்சியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தியா முழுவதும் தமிழீழத்தை விவாதப்பொருளாக மாற்ற முடியவில்லை. இது நடக்க வேண்டும்.

அப்போதுதான் இந்தியாவுக்கு எதிராக தமிழினத்துக்கு ஆதரவாகப் பல தேசிய இனங்கள், பல நாடுகள் ஒன்று சேரும். சேனல்- 4 எடுத்த ஆவணப்படத்தைத் தவிர நம்மிடம் என்ன ஆவணம் இருக்கிறது? நம்மிடம் திறமையான கலைஞர்கள் இல்லையா? ஆஸ்கர் வாங்கும் அளவுக்குத் திரைத்துறையில் சாதித்து இருக்கிறோம். ஆனால், நம்மினம் பற்றிய ஒரு ஆவணப்படம் இல்லை. வரலாற்றைத் தெரிந்துகொண்டும் நாம் அதனை ஆவணப்படுத்தவில்லை என்றால், எவனோ ஒருவன் அவன் விருப்பத்துக்குத் தமிழினத்துக்கு தலையங்கம் எழுதிவிடுவான். தமிழகமே எழுச்சி கொள். இல்லையென்றால் இன்று தமிழீழத்துக்கு நடந்தது, நாளை தமிழ் நாட்டுக்கும் நடக்கும்!” என்று முழங்கினார். திருமுருகன் காந்தி பின்னர் பேசிய பழ.நெடுமாறன் “புலிகள் இருந்தவரை இந்துமாக் கடலை எந்த நாட்டாலும் கைப்பற்ற முடியவில்லை. இன்று நிலைமை அப்படியல்ல. இந்துமாக்கடல் சீனாவின் கட்டுக்குள் சென்றுவிட்டது. இந்தியாவில் டெல்லியில் இருக்கும் புத்திசாலிகளே தெரிந்துகொள்ளுங்கள். இந்தியா மிகப்பெரும் ஆபத்தில் இருக்கிறது. பாகிஸ்தான், நேபாளம், வங்காளம், இலங்கை போன்ற நாடுகள் ஏற்கெனவே சீனாவின் ஆதிக்கத்துக்குள் சென்றுவிட்டது. தற்போது இந்தியப் பெருங்கடலும் அவர்களின் ஆதிக்கத்துக்குள் செல்லவிருக்கிறது. இதுமட்டும் நடந்துவிட்டால் இந்தியாவுக்கு மட்டுமல்ல… தெற்காசிய நாடுகளுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தல். இந்தக் கடல் நம்மிடம் இருக்கும் வரைக்குமே இந்தியாவுக்குப் பாதுகாப்பு. அதற்கு தமிழீழம் அமைய வேண்டும். அப்போதுதான் அது சாத்தியம்.” என்றார்.

மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது போல தமிழீழம் அமையவேண்டுமானால், அதுபற்றிய விவாதம் இந்தியா முழுவதும் நடத்தப்பட வேண்டும். தமிழீழம் அமைவதென்பது இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு மட்டும் நன்மை பயக்காது; ஒட்டுமொத்த இந்தியாவின் நன்மைக்கே அது வழி வகுக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மையும் கூட!