மண்ணுலகில், பிளவு உண்டாக்கவே வந்தேன் ???

மண்ணுலகில், பிளவு உண்டாக்கவே வந்தேன் ???

jeniferrayan, madurai
1/5/2014, Thursday
அய்யா , 49. பூமியின் மேல் அக்கினியைப் போட வந்தேன், அது அப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன். 51. நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தை அல்ல. பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன். 52. எப்படியெனில், இது முதல் ஒரே வீட்டில் ஐந்து பேர் பிரிந்திருப்பார்கள், இரண்டு பேருக்கு விரோதமாய் மூன்று பேரும் மூன்று பேருக்கு விரோதமாய் இரண்டு பேரும் பிரிந்திருப்பார்கள். 53. தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும், மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார். லூக்கா – 12:49,51,52,53 34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள். சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன். 35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும் மகளுக்கும் தாய்க்கும் மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். மத்தேயு – 10:34,35 விளக்கம் தாருங்கள் பேஸ்புக் இணைய தளத்தில் முஸ்லீம் நபர்கள் இந்த வசனத்தை சொல்லி நக்கல் அடிக்கிறார்கள் தயவுசெய்து சொல்லுங்கள்.


பதில்
அன்பு சகோதரரே, தங்கள் கேள்விக்கான பதிலை, சுருக்கமாக கீழே தருகிறோம்.
இயேசு கூறிய வார்த்தைகள் :
  • மண்ணுலகில், தீயை மூட்டவே வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டு இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் - லூக்12:49
  • மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை – லூக்12:51
  • மண்ணுலகில், பிளவு உண்டாக்கவே வந்தேன் - லூக்12:51.
  • இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும், மூவருக்கு எதிராக ஐவரும் பிரிந்திருப்பர். – லூக்12:52.
  • தந்தை மகனுக்கும்,மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.
  • உலகுக்கு அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன் -மத்10:34.
  • ஒருவருடைய பகைவர் அவருடைய வீட்டில் உள்ளவரே ஆவர் - 10:36.

சத்தியத்தை ஏற்றலும்- விளைவும் :
  • மேற்சொன்ன வசனங்கள், ஒரு சத்தியத்தை ஏற்பது அல்லது புறக்கணிப்பதன் “விளைவு” என்ற அடிப்படையிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இயேசு போதித்த "சத்தியம்" மேற்சொன்ன வசனங்களைத் தொடர்ந்து வருவதைப் பார்க்கிறோம்.
  • என்னை விட, தம் தந்தையிடமோ, தாயிடமோ "மிகுந்த அன்பு" கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர் - மத்10:37.
  • என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ "மிகுதியாய் அன்பு" கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.
  • தன் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் "என்னுடையோர்" எனக் கருதப்படத் தகுதியற்றோர்.
  • தம்உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். "என்பொருட்டு" தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.

மனித மனத்தின் சாய்வும் - தீர்மானமும் :
  • இரண்டு வேறுபட்ட காரியங்கள், ஒரு மனிதனுக்கு முன் நிற்கும் போது, அவனது மனம் எதன் பக்கம் "சாய்ந்துள்ளதோ" அதன்படியே அவனுடைய "தீர்மானமும்" இருக்கும்.
  • ஒருவரின் "தீர்மானத்தின்" அடிப்படையிலேயே, மேற்சொன்ன பிரிவு, அமைதியின்மை, வாள், நெருப்பு, போன்ற விளைவுகள் உருவாகின்றன.
இயேசுவின் உபதேச சத்தியங்களும் - இயேசுவும் :
  • இயேசுவும், இயேசுவின் உபதேசங்களும் ஒன்றே.
  • இயேசுவை ஏற்றுக்கொள்வது என்பது, அவரது உபதேசத்தை ஏற்றுக்கொள்வது ஆகும்.
  • இயேசுவை சந்திக்கிற ஒருவர் இரண்டு முடிவுகளுக்கு மத்தியில் நிற்கிறார்.
  • ஒன்று அவரை ஏற்றுக்கொள்வது, மற்றொன்று அவரை புறக்கணிப்பது.
ஏற்றுக்கொள்வது அல்லது புறக்கணிப்பதும் – மனித “பற்றும்” :
  • ஒருவருடைய “தீர்மானம்” அவர் ஒன்றில் வைத்திருக்கும் “பற்றின்” அடிப்படையிலேயே அமைகிறது.
  • இயேசுவை ஒருவர் சந்திக்கும் போது, அவரது எதிர்புறம், அவர் மற்றொன்றையும் சந்திக்கிறார்.
  • அதுவே உலகம், பிசாசு, சரீரம் என்ற எதிர்சக்திகள்.
  • பொதுவாக, இயேசுவை சந்திக்கும் முன் ஒருவர்,உறவுகள், உடமைகள், ஆசைகள் போன்றவற்றால் கவரப்பெற்று, உலகம், பிசாசு, சரீரத்தில் பற்றுக்கொண்டிருப்பார்.
  • இந்நிலையில், இயேசுவை ஒருவர் பற்றிக்கொள்ள வேண்டுமென்றால், மேற்சொன்ன பற்றுக்களை ஒருவர் “துறந்து” தான் ஆகவேண்டும்.
  • இந்த “பற்றறுத்தலின்” விளைவே, மேற்சொன்ன, பிரிவு, நெருப்பு, வாள் போன்றவை.
இயேசுவின் பொருட்டு – துறவு :
  • என் பொருட்டும், நற்செய்தியின் பொருட்டும்,
    • “வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் - இம்மையிலும், மறுமையிலும் கைமாறு பெறுவர்” - மாற் 10:29,30.
  • இறையாட்சியின் பொருட்டு,
    • “வீட்டையோ, மனைவியையோ, சகோதரர் சகோதரிகளையோ, பெற்றோரையோ, பிள்ளைகளையோ, விட்டுவிட்டவர் எவரும் - இம்மையிலும் மறுமையிலும் கைமாறு பெறுவர்” - லூக் 18:29,30.
  • என் பொருட்டு,
    • “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும், தன்னலம் துறந்து, தன் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு, என்னைப் பின்பற்றட்டும், தம் உயிரைக் காத்துக் கொள்ளவிரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்” - லூக் 9:23,24.

இரண்டு ஈர்ப்புக்களின் மத்தியில் மனிதன் :
  • மேற்சொன்ன, இயேசுவின் உபதேச சத்தியங்களின் அடிப்படையில், மனிதன் இரண்டு பெரும் “ஈர்ப்புக்களுக்கு” மத்தியில் நிற்கிறான்.
    • இயேசு – (என்பொருட்டு, நற்செய்தியின் பொருட்டு, இறையாட்சியின் பொருட்டு),
    • உறவுகள், உடமைகள்,ஆசைகளால் சூழப்பெற்ற, உலகம், பிசாசு, சரீரம்.
தீர்மானமும் - பிரச்சனையும் :
  • இங்கே, தீர்மானம் அதாவது OPTION என்று வரும் போது, ஒன்றைப் “பற்றிக்” கொண்டு, மற்றதை “துறந்து” அல்லது “பிரிந்து” தான் ஆகவேண்டும்.
  • இயேசுவை சந்திக்கும் போது, ஒருவர் இரண்டு வேறுபட்ட சக்திகளை சந்திக்கிறார் என்று பார்த்தோம்.
  • அதாவது,
    • கடவுள் X அலகை,
    • தர்மம் X அதர்மம்,
    • உண்மை X பொய்,
    • அன்பு X பகை,
    • பழி X மன்னிப்பு,
    • ஆத்திரம் X பொறுமை,
    • பரிசுத்தம் X மாசு
    போன்றவை.
  • இவற்றை இரண்டு “வழிகள்” என்று காண்கிறோம்.
  • ஒன்று “கடவுள் வழி” மற்றொன்று “அலகை வழி” அல்லது “உலக வழி”.
  • இதில், சிலர் “கடவுள் வழிகளை” பற்றி நிற்பர்.
  • வேறு சிலர் “உலக வழிகளை” பற்றி நிற்பர்.
ஓர் ஆளைப்பற்றி நிற்பதும் - அவர் வழிகளைப் பற்றி நிற்பதும் :
  • ஒரு குடும்பம் என்று வரும்போது, அங்கே ஆட்களைப் பற்றி நிற்கும் நிலையைப் பார்க்கிறோம்.
  • இங்கே, “ஆளா அல்லது வழியா” என்று பார்க்கும் போது, சிலர் குடும்பத்திலுள்ள ஆளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார், மற்றவர்கள் பின்பற்றும் வழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.
  • ஆளைப் பற்றி நிற்பவர், வழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்.
  • வழிகளைப் பற்றி நிற்பவர், ஆளுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்.
  • இவ்வாறு, “இயேசுவின் வழிகளை” பின்பற்றுபவர், “உலக வழிகளை” பின்பற்றாதவரை பிரிந்து தான் ஆக வேண்டும்.
  • இங்கே, உறவா, உடமையா, ஆசையா X இயேசுவா என்று பார்க்கும் போது, இயேசுவைப் பற்றிக்கொண்டவர், உறவையும், உடமையையும், ஆசைகளையும் துறந்து, அல்லது பிரிந்து தான் ஆக வேண்டும்.
பிரிவும் துன்பமும் :
  • இவ்வாறு உண்டாகும் பிரிவு , சில வேளைகளில் துயரத்தைத் தரும், வேதனையைத் தரும், போராட்டங்களைத் தரும்.
  • இதைக் குறித்தே இயேசு, பிரிவு, பிளவு, வாள், நெருப்பு என்று கூறினார்.
பழைய ஏற்பாட்டில் முன்னுதாரணம் - வி.ப 32:26-29 :
  • மோசே திருச்சட்டத்தைப் பெற்றுக் கொள்ள, மலைக்குச் சென்றார்.
  • அவர் திரும்பி வர, காலம் தாழ்த்தவே, மக்கள் பொறுமை இழந்தனர்.
  • தங்களுக்கென்று ஒரு கன்றுக்குட்டி செய்து வழிபட்டனர்.
  • இதைக்கண்ட மோசே, வருத்தமுற்றார், சினமுற்றார்.
  • கடவுளைப் புறக்கணித்து, கன்றுகுட்டியை வணங்கியதால் மக்கள் பெரும் பாவம் செய்தனர்.
  • ஆனாலும், கூட்டத்தில் எல்லாரும் இந்த பாவம் செய்யவில்லை.
  • கடவுளைப் பற்றி நின்றவர்களும் - கன்றுக்குட்டியை பற்றி நின்றவர்களுமாக ஒரு “கலப்படக் கூட்டமே” மோசேக்கு முன் நின்றது.
  • அப்போது மோசே இவ்வாறுகூறினார்:
  • (26) “ஆண்டவரது பக்கம் உறுதியாய் இருப்போர் என்னிடம் வாருங்கள்” என்றார். லேவியர் அனைவரும் அவரிடம் வந்து கூடினர்.
  • (27) அவர் அவர்களை நோக்கி: “இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே: ஒவ்வொருவனும் தன் வாளை இடையில் செருகிக்கொண்டு, பாளையத்திற்குள் சுற்றிவந்து, வாயில்வாயிலாகக் கடந்து சென்று தன் சகோதரனையும், தன் நண்பனையும், தனக்கு அடுத்திருப்பவனையும் வெட்டி வீழ்த்த வேண்டும்” என்றார்.
  • (28) மோசேயின் வாக்குக் கிணங்க லேவியர் செயல்பட்டதால் அந்நாளில் மக்களுள் ஏறத்தாள மூவாயிரம் பேர் மடிந்தனர்.
  • (29) மோசே “புதல்வன், சகோதரன் என்று பாராது நீங்கள் செயல்பட்டு அவருக்காக இன்று உங்களை அர்ப்பணம் செய்து கொண்டடீர்கள். இதை முன்னிட்டு ஆண்டவர் உங்கள் மேல் ஆசி பொழிற்துள்ளார்” என்றார்.
பிரிவும் துன்பமும் - ஏற்பு அல்லது புறக்கணிப்பதின் விளைவே :
  • மேற்கண்ட நிகழ்ச்சியில் இந்த பாடம் தெளிவாகிறது.
  • கடவுள் பக்கம் நின்றவர்கள், குடும்பத்தை, உறவுகளை, உடமைகளை, துணிவோடு துறக்கும் அல்லது பிரியும் முறையை பார்த்தோம்.
  • இதனால் ஏற்பட்ட, “வாள்”, “நெருப்பு”, “அமைதியின்மை” “பிளவு” அனைத்தையும் கண்டோம்.
கி.மு – கிபி :
  • இயேசு ஒரு “சகாப்தம்”.
  • அவரது வருகையினால் உலகம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
  • இதில், இயேசுவின் பக்கம் சேர்பவர்களுக்கும் - உலகத்தின் பக்கம் சேர்பவர்களுக்கும் இடையே உண்டாகும் “உறவு அழுத்தமே” நாம் கண்ட வசனங்களின் விளக்கம்.
  • நன்றி http://www.catholicpentecostmission.in/QuestionAnswer.html