கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்! கஜேந்திரகுமார்!
சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உழைக்குமானால் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார் என தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் தமிழ்த் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,எமக்கு எதிராக எத்தனையோ பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் பலத்த சவாலின் மத்தியில் இந்த தேர்தலில் நாம் போட்டியிட்டோம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றமைக்கு எமது பாராட்டை தொவித்துக்கொள்கின்றோம்.
தேர்தல் காலத்தில் கூறும் வாக்குறுதிகளை மட்டும் நம்பி எதனையும் செய்யவும் முடியாது ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
ஆனாலும் கூட தேர்தல் முடிவடைந்த பின்னர் நடைபெறவுள்ள செயற்பாடுகளின் அடிப்படையிலேயே எது தொடர்பாகவும் முடிவுக்கு வர முடியும்.
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எமக்கு பெரும் ஆதரவை வழங்கியுள்ளார்கள். அவர்கள் வழங்கிய நிதியுதவியின் மூலம் தான் நாம் மனிதாபிமான உதவிகளை செய்து வந்துள்ளோம்.
அவர்களுடைய உதவியும் ஆதரவும் தொடர்ந்தும் எமக்கு இருக்க வேண்டும். தமிழ் தேசம் என்பது வெறும் உள்ளூரில் உள்ளவர்களை மட்டும் கொண்டது அல்ல.
இது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியதாகும். தமிழ்த் தேசியவாதம் தான் ஓர் அர்த்தத்தைக் கொடுக்கின்றது.
தமிழ்த் தேசியம் என்பது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அதற்காக நாம் தொடர்ந்தும் உழைப்போம். எந்தவோரு சந்தர்ப்பத்திலும் வேறு இனத்தவர்களின் அடையாளத்தை அழிக்கவோ அன்றி சிதைக்கவோ நாம் முயலவில்லை.
அதனைப்போல எமது தேசியத்தையும் கலாசாரத்தையும் யாரும் அழிக்கவோ சிதைக்கவோ அனுமதிக்கவும் முடியாது என்றார்.
இன்று மதியம் நடைபெற்ற இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் செல்வராஜா கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் மற்றும் சட்டதரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.