தமிழ் மாணவர் செயற்கைகோளை தயாரித்து சாதனை
தமிழ் மாணவன் தயாரித்துள்ள கையடக்க செயற்கோளானது நாசா விண்கலம் மூலம் சில மாதங்களில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் முகமது ரிபாக் ஷாருக், இவர் தற்போது 12ம் வகுப்பு இறுதி தேர்வினை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர். இவர் சென்னையில் உள்ள ஸ்பேஸ் கிட்ஸ் என்னும் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய அறிவியல் போட்டியில் கலந்து கொண்டார். இவரது ஆர்வத்தினை பார்த்த நிறுவனம், அறிவியல் ஆராய்ச்சிகளை செய்வதற்காக முகமது ரிபாக் ஷாருக்குக்கு உதவியுள்ளது. இதன் மூலம் நாசா நடத்திய செயற்கைகோள் வடிவமைப்பு போட்டியில் பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 57 நாடுகளிலில் இருந்து பங்கேற்ற 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 80 மாணவர்களில் இவர் ஒருவரே இந்தியனாவார்.3டி தொழில்நுட்பத்தில் கார்பன் பைபரால் தயாரிக்கப்பட்டுள்ள 64 கிராம் எடையினை கொண்ட கையடக்க இந்த செயற்கைகோளுக்கு கலாமின் நினைவாக கலாம் சாட் என பெயரிடப்பட்டுள்ளது. டெக்னாலஜி டெமான்ஸ்ரேட்டர் வகையினை சேர்ந்த இந்த செயற்கைகோளானது விண்வெளியில் நிலவும் கதிர்வீச்சு, சூழல் மற்றும் இவற்றினால் செயற்கை கோள்களில் அடையும் மாற்றம் ஆகியவற்றினை அறிய உதவுகிறது. சர்-ஆர்பிட்டல் செயற்கைகோளான இதில் 8 சென்சார், ஆன்போர்டு கணினி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களான பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோளானது 240 நிமிடங்கள் விண்ணில் இருந்துவிட்டு பின்னர் கடலில் விழுந்துவிடும். இதனை கண்டறிந்து மீண்டும் ஆய்வு செய்யலாம். ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோளானது ஜீன் மாதத்தில் விர்ஜீனியா ஏவுத்தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. இதுகுறித்து முகமது ரிபாக், அடுத்ததாக செயற்கைகோளை நிரந்தரமாக விண்ணில் நிறுத்துவதற்கான ஆய்வில் ஈடுப்பட்டுள்ளேன். மேலும் நிலவில் தரையிறங்கும் வகையிலான ரோவர் இயந்திரத்தை தயாரிக்கும் ஆரம்பகட்டப் பணியிலும் இறங்கியுள்ளேன், அதில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.