வடக்கு, கிழக்கு இணைப்பை வலியுறுத்துவது ஏன்?
இலங்கையை முழு சிங்கள நாடாக மாற்ற முயற்சிப்பதால் தான் வட-கிழக்கு இணைப்பை வலியுறுத்துகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கைகான துருக்கியத் தூதுவர் துங்கா ஒஸ்காவிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த துருக்கியத் தூதுவர் துங்கா ஒஸ்காவிற்கும், வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் நேற்று முதலமைச்சரின் இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், வடமாகாணத்தில் சற்று வித்தியாசமான கருத்துக்களை தெரிவிப்பதாகவும், சிங்கள தலைவர்களுக்கு இடர்பாடாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் என அவர் என்னிடம் கூறினார். அத்துடன், சமஷ்டியை முன்வைத்துள்ளீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சமஷ்டி முறை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு முறை. பல நாடுகளில் மக்கள் தம்மை தாமே ஆளும் முறையினைக் கொடுத்துள்ளது. தன்னாட்சியை அந்தந்த பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு கொடுப்பதனால், அவர்களுக்கு தம்மைத் தாமே பார்த்துக்கொள்ளக் கூடிய நிலை ஏற்படுகின்றது என்றேன். அதற்கு அவர், யூகோஸ்லாவியா போன்ற நாடுகளில் சமஷ்டி முறை பிரிவினையினை ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக் காட்டினார். அதற்கு, பிரிவினைக்கு இடமளிப்பதா இல்லையா என்பது பெரும்பான்மை இன மக்களும் சிறுபான்மை இன மக்களும் எந்தளவிற்கு ஒத்துழைப்புடன் இருக்கின்றார்கள் என்பதில் தான் உள்ளது. பிரிவினைக்காக மக்கள் போராடியதன் காரணம், தமிழ் மக்களை அனைத்து விடயத்திலும் ஒதுக்கி வைக்கப்பட்டமையினாலே தவிர வேறு ஒன்றுமில்லை. எங்களின் வேலைகளை நாங்களே செய்வதற்கு மத்திய அரசாங்கத்தின் உள்ளீடு இல்லாமல், நாம் சுதந்திரமாக செயற்படுவதற்கு ஏதாவது வழியிருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டேன். மாகாணத்திற்கு போதியளவு அதிகாரத்தினைக் கொடுத்தால், போதுமானது தானே. அதுவும் அனைத்து அதிகாரங்களையும் மத்திக்கு வைத்துக்கொண்டு, மாகாணத்திற்கு கொடுத்தால், இதனடிப்படையில் தான் சமஷ்டி கோரிக்கையினை வலியுறுத்தி வருகின்றேன் என சுட்டிக் காட்டினேன். வடகிழக்கு இணைப்பதற்கு முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் எதிர்க்கின்றார்கள் நீங்கள் மட்டும் ஏன் இணைக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறீர்கள் என அவர் மீண்டும் கேள்வி எழுப்பினார். எனது சிறுவயதில் பார்த்த போது, கிழக்கு மாகாணத்தில் 5 முதல் 10 வீதத்திற்குட்பட்ட சிங்கள மக்களே இருந்தார்கள். தற்போது பார்த்தால், கிழக்கில் 31 வீதமான சிங்கள மக்கள் இருக்கின்றார்கள். பாரம்பரியமாக வடகிழக்கு தமிழ் பேசும் பகுதிகளாக இருந்தும், அந்த இடங்களில் சிங்கள மேலாதிக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, வடக்கிலும் தற்போது இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடகிழக்கினை பிரித்து மேலாதிக்கத்தினை உருவாக்கி, மக்களை பலவிதமான குழப்பங்கள் மற்றும் கலவரங்களின் ஊடாக அவர்களது பிரதேசங்களில் இருந்து வெளியேற்றி, முழுமையாக சிங்கள ஆதிக்கத்தினை உருவாக்க பார்க்கின்றார்களோ என்ற அச்சத்தின் காரணமாக எமது பாதுகாப்பின் நிமித்தம் வடகிழக்கினை இணைக்க வேண்டிய அவசியம் இருக்கின்றதென்பதனை எடுத்துக் காட்டினேன். அவர் அதனை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.