தொடர்ந்து போராடுவோம் … புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி
தோழர்களுக்கு வணக்கம்,தமிழினப்படுகொலைக்கான 8ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை தடுத்து 17 தோழர்களை சிறைப்படுத்தியதற்கும் மற்றும் எங்கள் (டைசன், இளமாறன், அருண்) நால்வர் மீதும் ஏவிய குண்டர் சட்டத்தை கண்டித்தும் எதிர்வினையாற்றிய தோழர்கள் அனைவருக்கும் எங்களது புரட்சிகர வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
’தமிழ், தமிழர், தமிழீழம், தமிழ்நாடு’, என்று நமது தேசிய இனத்திற்கான உரிமைகளை பேசுபவர்களை முடக்கவும், சிறைப்படுத்தவும் வெறி பிடித்த மிருகமாய் பாஜக களமிறங்கியிருக்கிறது. ஏனெனில் இந்த முழக்கங்களை முடக்கினால் மட்டுமே “இந்து”, “இந்துத்துவம்” என்ற பாசிச கருத்தியலை தமிழ்நாட்டில் வளர்த்து எடுக்க இயலும் என்று பாஜக- ஆர்.எஸ்.எஸ் கும்பல் நம்புகிறது. ஏனெனில் ’தமிழர்கள் இந்துக்கள் அல்ல’ என்பதை ஆர்.எஸ்.எஸ் கும்பல் நன்கு அறியும். ஆகவே தமிழன் எனும் அடையாளத்தை அழித்துவிட்டு ‘இந்து’ எனும் அடையாளத்தை நம்மீது திணிக்கிறது. இந்திய அளவில் இந்த வன்முறைக் கூட்டத்தை உறுதியுடன் எதிர்கொள்பவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்.
பெரியார், அம்பேத்கர் மற்றும் ‘ தேசியத் தலைவர்’ பிரபாகரன் ஆகியோரின் அர்ப்பணிப்பும், அறிவும், அரசியலும், நம்மை இந்த வன்முறைக் கும்பலின் கருத்தியலை அம்பலப்படுத்தவும், தனிமைப்படுத்தவும், தோற்கடிக்கவும் செய்யக்கூடியவர்களாக மாற்றியிருக்கிறது.
இனிவரும் காலத்தில் இந்தக் கும்பலுக்கு எதிரான போராட்டம் தீவிரமடையும். இந்த போராட்டத்தில் தோழமை ஆற்றல்களாக நாம் அனைவரும் கைகோர்த்து களம் காண்போம். எங்கள் மீது பாய்ந்திருக்கும் இந்த அரச அடக்குமுறை எங்களை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது, உறுதிப்படுத்தியிருக்கிறது. தமிழ்த்தேசியத்தின் மீதான பற்றுறுதியை மெருகேற்றியிருக்கிறது. இவர்களை வெல்லக்கூடிய வலிமையான வீரர்களாக நாம் அனைவரும் மாறி இருக்கிறோம்.
இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமானது, சமரசமற்றது, தவிர்க்க இயலாதது. இந்த போராட்டத்தின் 2000 வருட வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் நிற்கிறோம். அசுர பலத்துடன் வெறிப் பிடித்த மிருகமாய் நம்மைக் குதற காத்திருக்கும் இந்த கூட்டத்தை வேட்டையாடும் பொறுப்பை வரலாறு நமக்கு கொடுத்திருக்கிறது. இத்தகைய வாய்ப்புகள் வரலாற்றில் அரிதாகவே வரும். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த அரச அடக்குமுறை மிகத் தீவிரமானதோ, கடினமானதோ அல்ல. நம்முடைய உறுதியின் முன் இது புறக்கணிக்கக்கூடிய, எளிதில் வென்று கடந்து விடக்கூடிய அடக்குமுறையே. எங்களைவிட பல மடங்கு அதீத அடக்குமுறைகளை எதிர்கொண்டு நமக்கான போராட்டத் தளங்களை அமைத்துக் கொடுத்த போராளிகள் பலர் நம் சமகாலத்தில் வசித்து வருகிறார்கள். அவர்களிடமிருந்து நமக்கு கிடைத்த அரசியல் பாடங்கள் வழிகாட்டுதலை மேற்கொண்டு போராட்டத்தை மேலும், மேலும் தீவிரமாக்க சபதமேற்போம்.
நினைவேந்தல் என்பது ஒரு சடங்கல்ல. இனப்படுகொலையை வழி, வழியாக நினைவுப்படுத்துவதும், அந்த பேரழிவின் நினைவுகளை அரசியலாக்கி நம்மை கூர்மைப்படுத்துவதற்குமான ஒரு பண்பாட்டு நிகழ்வு. தமிழர் கடலோரத்தில், முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இந்த இனப்படுகொலையை மீண்டும், மீண்டும் நினைவுப்படுத்தி இந்நிகழ்விற்கான நீதியை வென்றெடுக்க நம்மை நாமே தயார் செய்து கொள்ளும் நிகழ்வு. இந்நிகழ்வை வன்முறையாக, அடக்குமுறையை ஏவி பாஜக வும், அதன் பினாமி தமிழக அரசும் முடக்கிவிட முனைகிறது. இந்த தமிழின விரோத நிகழ்வினை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். இனி தமிழகமெங்கும் நினைவேந்தல் நிகழ்வினை நாம் துவங்க வேண்டும். தமிழகத்தின் மூலை, முடுக்குகளில் வாழும் தமிழர்கள் ‘ஏன் தங்கள் தொப்புள் கொடி’ உறவுகளான ஈழத்தமிழர்கள் பச்சைப் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை உணரச் செய்ய வேண்டும்.
தமிழீழப்படுகொலையை நிகழ்த்திய இலங்கைக்கு கிடைத்த இந்தியாவின் ஒத்துழைப்பே இதுநாள் வரையில் இலங்கை தண்டிக்கப்படாமல் தப்பிப்பதற்கான காரணமாகும். நம்மிடம் வாங்கிய வோட்டுகளை வைத்து, பாராளுமன்றம் மற்றும் மக்கள் மத்தியில் ஒப்புதல் எதையும் பெறாமல் ‘ஆரிய இனவெறி’, ‘ பிராந்திய ஆதிக்க நலன்’, ‘ பொருளாதார- ரானுவ நலன்’ ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு சனநாயக விரோதமாக இந்திய அரசு செய்த நடவடிக்கைகளை சக மக்களிடத்தில் அம்பலப்படுத்த வேண்டிய கடமை நமக்குண்டு. நேற்று ஈழத்தில் அக்கிரமங்களைச் செய்த இந்திய அரசு, நாளை நம் மீதும் இதே அநீதிகளை அரங்கேற்றும். எனவே தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது அனைத்து சனநாயக சக்திகளின் போராட்டமே. இதை நாம் வென்றாக வேண்டும். எனவே இந்த அடக்குமுறைகளை கடந்து நாம் நமது போராட்டக் களத்தினை வலுப்படுத்துவோம்.
கடந்த 21ம் தேது நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று அரச வன்முறைக்கு கண்டனம் தெரிவித்த தோழர். வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), தோழர். மல்லை சத்யா, சுப்ரமணியன், அந்தரிதாஸ் (மதிமுக), ஓவியர் வீரசந்தானம், தோழர். மகேஸ் (மக்கள் மன்றம், காஞ்சி), தோழர். அரங்க குணசேகரன், தோழர். பொழிலன், தோழர். கி.வே. பொன்னையன் (தமிழக மக்கள் முன்னனி), இயக்குனர் தோழர். கெளதமன், வழக்கறிஞர்கள் தோழர். கயல், திருமலை, தோழர். நாகை திருவள்ளுவன் ( தமிழ் புலிகள் கட்சி), தோழர். தபசி (திராவிடர் விடுதலை கழகம்) , வழக்கறிஞர் தோழர் பாவேந்தன் ஆகியோருக்கும்,
தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம் மற்றும் மே பதினேழு இயக்கத் தோழர்கள் என 17 தோழர்களை கடந்த மே 21ம் தேதி கைது செய்து பொய் வழக்கில் சிறையில் அடைத்ததற்கு கண்டனம் தெரிவித்த தோழர். ஜவாஹிருல்லா, தோழர். சீமான், தோழர். ஜீ. ராமகிருஷ்ணன் (சி பி எம்), தோழர். முத்தரசன் தோழர். தெஹ்லான் பார்கவி, தோழர். ரவிக்குமார் மற்றும் அய்யா. பழ. நெடுமாறன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் மற்றும்,
24ந் தேதி நடந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்று தங்களது கண்டனங்களை பதிவு செய்த மதிமுக துணை பொதுச் செயலாளர் தோழர் மல்லை சத்யா, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் அப்துல் சமது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் வேணுகோபால், SDPI கட்சியின் மாநில ஊடகப் பொறுப்பாளர் தோழர் கரீம், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் அரங்க குணசேகரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் சென்னை மாவட்டப் பொறுப்பாளர் தோழர் குமரன், தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தோழர் அருணபாரதி, தமிழர் விடியல் கட்சியின் மாநில மாணவரணி பொறுப்பாளர் தோழர் நவீன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி, இயக்குனர் .வ .கௌதமன் விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் வினோத், பூவுலகின் நண்பர் தோழர் வழக்கறிஞர் சுந்தர்ராஜன், கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தின் தோழர் SP பாலகிருஷ்ணன், புத்தர் கலைக்குழு தோழர் மணிமாறன் தோழர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்.
குண்டர் சட்டம் ஏவப்பட்டதற்கு எதிராக குரல் கொடுத்த அனைவரின் சனநாயக மறுப்புக்கு எதிரான பதிவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். (குண்டர் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அனைத்து இயக்கங்கள், கட்சிகள், கலைஞர்கள், இயக்குநர்கள், செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் பெயர்கள் இந்த இணைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன https://www.facebook.com/thirumurugan.gandhi/posts/10213129062724723 )
புழல் சிறையில் சிறைப்பட்ட தோழர்களை நேரிடையாக சந்தித்து ஆதரவும், உற்சாகமும் தெரிவித்து, தோழர்களுக்கு தேவைப்பட்ட உதவிகளை செய்து கொடுத்தும், சிறை மீண்டவுடன் இந்த அடக்குமுறையைக் கண்டித்து ஆதரவளித்த அய்யா. வைகோ அவர்களுக்கும், மே 21ந் தேதி இரவிலிருந்து தொடர்ச்சியாக காவல்துறை, நீதிபதி சந்திப்பு என அனைத்து நகர்விலும் துணை நின்றதும், அடுத்து வந்த நாட்களில் சிறையில் தோழர்களை சந்தித்து உற்சாகமூட்டிய தோழர். நாகை திருவள்ளுவன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். புழல் சிறையில் அன்றாடம் சந்தித்து உரையாடி உற்சாகமும், ஆதரவும் அளித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர். வன்னியரசு மற்றும் இதர பொறுப்பாளர்களுக்கும் எங்களது நன்றியை உரித்தாக்குகிறோம். எமக்கு அடுத்த அறையில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் விடுதலையடைய வாழ்த்துகிறோம்.
மேலும் கடந்த மே 29ந் தேதி தமிழக அரசு பாஜக அழுத்தத்திற்கு அடிப்பணிந்து என் மீதும் (திருமுருகன்-மே 17 இயக்கம்), டைசன், இளமாறன், அருண் ( தமிழர் விடியல் கட்சி) ஆகியோர் மீதும் அராஜகமான ஒடுக்குமுறையை ஏவி “குண்டர் தடைச் சட்டத்தை” பாய்ச்சியது. இந்த அடக்குமுறையைக் கண்டித்து போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட தோழர்கள் அரங்க. குணசேகரன், பொழிலன், கோவை கு. இராமகிருட்டிணன் மற்றும் இதர இயக்கத் தோழர்களுக்கும் எங்களது நன்றியை உரித்தாக்குகிறோம்.
இந்த அடக்குமுறையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டு சிறையில் சந்தித்து ஆதரவு தெரிவித்த அய்யா. வைகோ அவர்களுக்கும், போராட்ட அழைப்பைக் கொடுத்து எதிர்ப்பினை வலுப்படுத்த முயற்சி எடுத்து வரும் தோழர். வேல்முருகன் அவர்களுக்கும், பாஜக வின் பின்னனி அரசியல், தமிழக அரசின் பலவீனமான பினாமி அரசியலை அம்பலப்படுத்தி கண்டனம் தெரிவித்த திமுக செயல் தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கும், பாஜக அரசின் பாசிசத்தை அம்பலப்படுத்தி கண்டனம் வெளியிட்ட தோழர்கள் ஜவாஹிருல்லா(தமுமுக), தெகலான் பார்கவி (எஸ் டி பி ஐ) ஆகியோருக்கும் மற்றும் கண்டன அறிக்கை வெளியிட்டும், தொலைக்காட்சி விவாதத்தில் எதிப்புகளை பதிவும் செய்து பாஜக வை அம்பலப்படுத்திய தோழர். வேல்முருகனுக்கும், தோழர். சீமான் ஆகியோருக்கும் விடுதலை இதழில் அடக்குமுறையை பதிவு செய்து கண்டித்த அய்யா. வீரமணி அவர்களுக்கும் ஜனநாயக உரிமைக்கு ஒற்றைக்குரலில் பதிவு செய்தமைக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
முக்கியமாக படைப்பாளிகளின் உணர்வினை வெளிப்படுத்தி, அடக்குமுறையைக் கண்டித்த இயக்குனர்கள் அய்யா. பாரதிராஜா, அமீர், பாலாஜி சக்திவேல், வெற்றிமாறன், ராம், பிரம்மா, கமலக்கண்ணன், கெளதமன் ஆகியோருக்கும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தோழர். சுந்தர்ராஜனுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறையிலும், நீதிமன்றத்திலும், சந்தித்து ஆதரவளித்த தோழர். வழக்கறிஞர் சுப்ரமணியன் (மதிமுக), வழ. ப. புகழேந்தி (தமிழ் தேச மக்கள் கட்சி), வழ. சுரேஷ், வழ. பாலாஜி (நாம் தமிழர் கட்சி), வழ. சாரநாத் ( விசிக), பாலாஜி (விசிக) மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த தோழர் வழ. துரைசாமி, தோழர். குமரன், தோழர். மனோஜ் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். SDPI கட்சி வழக்கறிஞர்களை சந்திக்க இயலாமல் போனதற்கு வருத்தங்களை பதிவு செய்கிறோம்.
அதே சமயத்தில் அரசின் அடக்குமுறையை அம்பலப்படுத்தியது மட்டுமல்லாமல் அரசை aதனிமைப்படுத்திய இயக்கத் தோழர்கள், சிந்தனையாளர்கள், படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள், சமூக வலைதள பதிவர்கள் என பாசிச எதிர்ப்பு அரசியலை வலுப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் ஆரத் தழுவி உரித்தாக்குகிறோம். தொடர்ந்து செய்திகள், விவாதங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்திய ஊடகங்களுக்கு நன்றி.
இச்சமயத்தில் கடுமையான அடக்குமுறையை எதிர்கொண்டு சிறையில் எம்முடன் நிற்கும் போர் குணமிக்க தமிழர் விடியல் கட்சியின் மூத்தத் தோழர்கள் டைசன், இளமாறன், அருண் மற்றும் இதர பொறுப்பாளர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
தொடர்ந்து போராடுவோம், தமிழர்கள் உரிமைகளை வென்றெடுப்போம்.
ரேசன் கடை, காவிரி உரிமை, கர்நாடக தாக்குதல், பண மதிப்பிழப்பு, சல்லிகட்டு, நெடுவாசல், கீழடி, மீனவர்கள் கொலை போன்ற தமிழின விரோத பாஜக வின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதால் மே17 இயக்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கி, முடக்கிவிட முனையும் பாஜக- ஆர்.எஸ்.எஸ் கும்பலின் அரசியலையும், ஆரிய இனவெறியை வீழ்த்திடும் பணியை மே 17 இயக்கம் சமரசமின்றி மேற்கொண்டு முன்னேறி செல்லும்.
நாம் வெல்வோம்!!
– திருமுருகன் காந்தி,
ஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம்
புழல் சிறை.
7-6-2017