கருணாநிதியின் கண்ணீரிலும் நிச்சயம் கபடம் கலந்திருக்கும்!

கருணாநிதியின் கண்ணீரிலும் நிச்சயம் கபடம் கலந்திருக்கும்!


இந்த வாரம் உலகத் தமிழர்களை உலுக்கிய ஒரு விடயம் 12வயதுடைய ஒரு பாலகனின் படுகொலை தொடர்பானது. ஆமாம் அன்பர்களே! இந்த பாலகன் பாலச்சந்திரனின் கோரக் கொலை தொடர்பான செய்திகள், வெறுமனே ஒரு அனுதாப அலையை மட்டும் ஏற்படுத்தக் கூடாது என்ற எண்ணம் எமக்குண்டு.
இது தொடர்பாக கனடா உதயன் பத்திரிகையின் கதிரோட்டத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
இந்த வாரம் உலகத் தமிழர்களை உலுக்கிய ஒரு விடயம் 12வயதுடைய ஒரு பாலகனின் படுகொலை தொடர்பானது.
ஆமாம் அன்பர்களே!
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 12 வயது மகன் பாலச்சந்திரன் என்ற இளம் புத்திரச் செல்வத்தை பாதுகாப்பு அரண் ஒன்றுக்குள் கொண்டு சென்று, இறுதி நேர பசி தீர்க்க இனிப்புப் பண்டமொன்றை கொடுத்து அவன் அதை சுவைப்பதை பார்த்து பரிகாசம் செய்த பின்னர், துப்பாக்கிக் குண்டுகளால் கருகச் செய்த கோரக் காட்சி தொடர்பான புகைப்படங்களும் செய்திகளும் வெளியாகிய வண்ணம் உள்ளன.
2009ம் ஆண்டு மே மாதத்தில் நம்மையெல்லாம் கலங்கிக் கண்ணீர் விடச்செய்த முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலைகள் பற்றிய கோரமான சித்தரிப்புக்களும் சிந்தனைகளும் இன்னும் எம்மை வாட்டிக் கொண்டிருக்கையில் இந்த பாலகன் பாலச்சந்திரனின் கோரக் கொலை தொடர்பான செய்திகள், வெறுமனே ஒரு அனுதாப அலையை மட்டும் ஏற்படுத்தக் கூடாது என்ற எண்ணம் எமக்குண்டு.
தமிழீழ மண்ணை நான் கைகளால் அள்ளி எறிந்து என் சுதந்திரத் தாகத்தை தீர்த்துக் கொள்வேன்” என்று தன் தந்தை வழி நின்று, அந்த மண்ணின் சுகத்தை தான் பிறந்த நாள் தொடக்கம் அனுபவித்தவன் தான் இந்த செல்வம் பாலச்சந்திரன்.
வெளிநாடுகள் செல்லவும், ஆடம்பரமாக வாழவும் எத்தனையோ சுகபோக வாய்ப்புக்கள் இருந்தும் பாலச்சந்திரனின் பிஞ்சு உள்ளம் தந்தையின் காலடிக்குள் வளர்ந்தது, ஒரு சுதந்திர வேட்கையோடு. அதுதான் அந்த சிங்களப் படைகளும் சின்னப்பையன் என்று பாராது துப்பாக்கிகளால் மென்மையான அந்த உடலை துளைத்து, துளைத்து துவம்சம் செய்து விட்டன.
பாலகன் பாலச்சந்திரனின் வயதையொத்த பல வன்னிச் செல்வங்கள் வகை தொகையாக எறியப்பட்ட குண்டுகளின் கோரப் பிடிகளுக்குள் சிக்கி தங்கள் உயிர்களை தொலைத்திருப்பார்கள்.
ஆனால் உலகத்தை வியப்பிற்குள் ஆழ்த்திய ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் தலைவன் என்ற வகையில் தலைவர் பிரபாகரன் அவர்கள் அன்பை மட்டுமல்ல அரசியலையும் கற்றுக்கொடுக்க அதனைப் பின்வற்றி வாழ்ந்தவன் என்பதனால் சின்னாப் பின்னமாகி விட்டாடன் நமது சின்னவன் பாலச்சந்திரன்.
பாலகனின் சரிந்து கிடக்கும் உடலைப் பார்த்து தமிழ் நாட்டின் தமிழ்த் தலைவர்கள் எல்லோரும் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.
அவர்களில் வைகோ அவர்கள் கண்களில் நீர் வடிய தனது ஆத்திரத்தை கொட்டித் தீர்க்கின்றார். அந்த உணர்வு மிக்க காட்சியை நாம் காணொலிகளில் கண்டோம். எல்லோரும் அழுதும் அலறியும் தங்கள் கண்டனத்தை தெரிவித்த வண்ணம் இருக்கின்றார்.
நானும் பேசப் போகின்றேன் என்று சாய்மனைக் கதிரையில் நிமிர்ந்தபடி அமருகின்றார் ஒரு “அநியாயத்திற்கு துணையான தமிழக அரசியல்வாதி” ஆமாம்! கருணாநிதி தனது கருத்துக்களை சொல்லுகின்றார் பாலகன் பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பாக.
விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் என்ற இளம் தளிரை, துப்பாக்கிக் குண்டுகளால் கருகச் செய்த கோர நிகழ்ச்சியைக் காணும் போது, கொடுமை, கொடுமை, இதைவிடப் பெரிய கொடுமையை வேறெங்கும் காண முடியாது.
நேற்றைய தினம் வெளியிட்ட அந்தப் புகைப்படங்களைக் கண்டு கலங்கிக் கண்ணீர் விடாத கட்சித் தலைவர்களே தமிழகத்திலே இல்லை.” என்கின்றார்.. ஏற்கெனவே கண்ணிர் விட்ட பழ நெடுமாறன், திருமாவளவன், வைகோ போன்றவர்களோடு தன்னையும் சேர்த்துக் கொள்ள முயலுகின்றார் முத்துவேல் கருணாநிதி.
2009ம் ஆண்டு மே மாதம் வரையிலும் நாங்கள் எங்கே இருந்தோம்? இந்த கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்? என்பதில் சில விடயங்கள் வெளியே வந்தன. பல இரகசிய விடயங்கள் வெளியே வரவில்லை.
ஆனால் வெளிவந்தவையும் வெளியே வராதவையுமாக அநியாயங்களை செய்து கொண்டிருந்த கருணாநிதி இப்போது போலியாக கண்ணீர் விடுகின்றாராம்.. நமக்கு நன்கு தெரியும் கபடத்தனம் கொண்ட கருணாநிதியின் கண்ணீரிலும் நிச்சயம் கபடம் கலந்திருக்கும் என்று.
முள்ளிவாய்க்காலில் நமது உறவுகளின் உயிர்கள் போராளிகளாகவும் பொதுமக்களாகவும் மகிந்தவின் மேற்பார்வையில் கொடூரமாக பறிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது உலகெங்கும் இருந்து எட்டுத் திசைகளிலும் வாழும் தமிழ் மக்கள் கருணாநிதி அவர்களை நோக்கி தங்கள் கரங்களை நீட்டி தாழ்மையாக வேண்டிக்கொண்டார்கள். மன்றாடினார்கள். கூக்குரலிட்டார்கள்.
மத்திய அரசின் மனதை மாற்றும் வகையில ஏதாவது செய்து நமது மக்கள் கொல்லப்படுவதை நிறுத்துங்கள்” என்று. அவரது கைகளில் மேற்படி மக்கள் மன்றாடிக் கேட்டவற்றை சில நிமிடங்களுக்குள் செய்து கொடுக்கக் கூடிய சக்தி இருந்தது. அதனாற்தான் எண்திசைத் தமிழர்கள் “ஏதாவது செய்யுங்கள்” என்று கேட்டார்கள்.
ஆனால் கலைஞர் கருணாநிதியின் மனம் மாறவில்லை. அவர் மௌனமாக இருக்கையில் இலங்கையின் பக்கமிருந்து அவருக்கு “மரியாதை” அதிகமானது. தங்கள் மரியாதையை வெளிகாட்டும் வகையில் கருணாநிதியின் கைகளுக்குள் மேலும் நிதி வந்து சேர்ந்தது.
இறுதியில் நமது மக்கள் அழிக்கப்படும் கொடூரத்தை தன் மனதால் கூட நினைத்துப் பார்ப்பதில்லை என்ற முடிவோடு நிம்மதியாக நித்திரைக்குப் போனார்.
2009ம் ஆண்டு அவரது ஆட்சி தமிழகத்தில். மத்தியில் அவரது கட்சி எம்பிக்கள் பலர் மந்திரிகளாக. ஒரு மந்திரிப் பதவியை இராஜினாமாச் செய்திருந்தால் ஒரு இலட்சம் தமிழர்களின் உயிர்களை வன்னி மண்ணில் காப்பாற்றியிருக்கலாம். மௌனத்திற்கு மேலாகவும் முதலமைச்சராக அவர் தனது அதிகாரத்தை காட்டினார்.
அந்த நாட்களில் தமிழ் நாட்டு தினசரிகள் பலவற்றின் மீது. இணையத்தளங்களில் பிரசுரமாகிய செய்திகளையும் புகைப்படங்களையும் பிரசுரித்த தமிழகப் பத்திரிகைகள் மீது அவர் தன் கோபத்தைக் காட்டினார்.
முள்ளிவாய்க்கால் படுகொலைச் செய்திகளையும் படங்களையும் பிரசுரிக்காதீர்கள். உங்களுக்கு தமிழ் நாட்டுச் செய்திகள் போதாதா? வன்னியின் படுகொலைச் செய்திகளை பிரசுரித்தால் உங்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் விளம்பரங்கள் அனைத்தும் நிறுத்தப்படும். மறந்து விடாதீர்கள்” என்று கர்ச்சித்தார் கருணாநிதி.
மேற்கண்டவாறு கருணாநிதியாலும் அவரது உதவியாட்களாலும் எச்சரிக்கப்பட்ட தமிழகத்தின் பத்திரிகையாளர்கள் இந்த வார்த்தைகளைக் கேட்டு திடுக்கிட்டார்கள். தங்கள் மொழியைப் பேசும் உறவுகளின் அழிப்பு பற்றிய செய்திகளைக் கூட ஆட்சியில் அமர்ந்திருக்கும் கருணாநிதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லையே! ஏன் என்று தங்கள் வட்டத்திற்குள் கேட்டுக்கொண்டார்கள்.
அப்போதுதான் அவர்களிடம் கசிந்து வந்த செய்திகள் கூறி நின்றன. “கோடிக் கணக்கான நிதி அன்பளிப்புகளுக்கு அடங்கிப்போக வேண்டிய கட்டாயம் கருணாநிதிக்கு வந்து விட்டது என்று. அப்போதும் தனது கபடத்தனமான அரசியலால் தமிழக மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தனது இருப்பைத் தக்க வைத்துக்கொண்டார்.
அடுத்து வந்த தேர்தலில் பதவியை இழந்து போன கருணாநிதி இப்போது அடிக்கடி கண்ணீர் விடும் கனவானாக தம்மைக் காட்டிக்கொள்ள முனைகின்றார். டெசோ மாநாடு நடத்தப்படும் தனது நோக்கம் பற்றி அண்மையில் தமிழகப் பத்திரிகைகளுக்கு அவர் ஒரு அறிக்கை விட்டார். அதில் அவர் கூறுகின்ற விடயங்களை நாம் உன்னிப்பாக படிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களை நாமே இனி பாதுகாக்க வேண்டும். அதற்காக அகிம்சை வழியில் போராடிக் கொண்டே இருப்போம்” என்றார் கருணாநிதி. அப்படியானால், கபடம் நிறைந்த கருணாநிதி அவர்களிடம் நாம் கேட்பது இதுதான்.
தமது சொந்த மண்ணிலிருந்த வண்ணம் பலமான ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்தியபடி இருந்த நமது விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்படும் போது அதை வேடிக்கை பார்த்தபடியும் மௌனம் காத்தபடியும் இருந்துவிட்டு இப்போது நீங்கள் யாருக்காக அகிம்சை போராட்டம் நடத்தப் போகின்றீர்கள்?
அப்படியானால் தாங்கள் நமக்காக அகிம்சைப் போராட்டம் ஒன்றை தலைமை தாங்கி நடத்துவதற்காகத்தான் விடுதலைப் புலிகள் என்ற மகத்தான விடுதலை இயக்கத்தை அழிப்பதற்கு துணைநின்றீர்களா ஐயா??. அங்கேயும் தங்கள் கபடத்தனம் தான் முன்னிற்கின்றதா?
கனடா உதயன் - கதிரோடடம்