இவர்கள் தாம் செய்வது என்ன என்று தெரிந்தே செய்கிறார்கள்!

இவர்கள் தாம் செய்வது என்ன என்று தெரிந்தே செய்கிறார்கள்!


வருவார் ஆனால் அவர் வருகையை யாரும் அரசியலாக்ககூடாது என்ற பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் அறிவித்துள்ளார்.
புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் சிறீலங்காவுக்கு வருகை தருவாரா, மாட்டாரா என்று கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக அலைமோதிய ஆரூடங்கள், கணிப்புகளை கடந்து இப்போது உறுதியாக கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் அறிவித்துவிட்டார்.
2015 ஜனவரி 13-15 திகதிகளில் அவரது வருகை இருக்கும் என்று. உத்தியோகபூர்வமான அறிவிப்பு.
அத்துடன் அந்த அறிவிப்பில் சிறிய ஒரு இடைச்செருகலையும் அவர் வலிந்து சேர்த்துள்ளது கவனிக்கப்பட்டதா இல்லையா தெரியவில்லை.
எனினும் எமக்கு அந்த இடைச்செருகல் வசனம்தான் மிகமுக்கியமானதாக இருக்கிறது.
போப் பிரான்சிஸ்ஸின் வருகையையின் போது அரசியலை யாரும் ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் என்பதே அந்த அறிவிப்பு.
புனித பாப்பரசரின் விஜயத்தை யாருமே அரசியலாக்கக் கூடாது என்ற பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களின் அறிவிப்புக்கு பின்னால் சிங்கள பேரினவாதத்துக்கு எதிரான ஏதும் கருத்துகள் பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களாலோ அல்லது வடக்கு - கிழக்கின் திருச்சபையாலோ அந்நேரத்தில் வெளியிட்டு விடப்படக்கூடாது என்ற மகாகரிசனை தெரிகிறது.
மல்கம் ரஞ்சித் ‌அவர்களின் இந்த அறிவிப்பு சம்பந்தமாக பார்ப்பதற்கு முன்பாக, முதலில் ஒன்றை பொதுவாக புரிந்து கொள்ளுதல் மிக அவசியம்.
கடந்த காலங்களில் முழு இலங்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்புகளில் இருந்தவர்கள் எப்போதும் சிங்கள பேரினவாத அரசைக் காப்பதிலும் சிங்கள இனம் என்பதற்கே அதிக முன்னுரிமை கொடுத்ததும் வரலாற்றின் பக்கங்களில் பதிவாகி இருக்கிறது.
மனுக்குலத்தின் பாவங்களுக்காக இரத்தம் சிந்திய இறைதுாதரின் போதனைகளை ஒழுகுபவர்கள், போதிப்பவர்கள் இப்படி ஓரவஞ்சகமாக நடந்து கொள்வது எத்தனை பாவம் என்று தெரிந்துகொண்டே இதனை கடந்த காலங்களில் பேராயர்கள் செய்துள்ளார்கள்.
2009 ஒக்டோபர் 2ம் திகதி அன்று கொழும்பின் அமெரிக்க துாதர் பெற்றீசியா பியுட்டினியஸை சந்தித்த மல்கம் ரஞ்சித் மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக கதைத்ததும் போர்க்குற்றசாட்டுகளை வலியுறுத்தினால் சிறீலங்காவில் ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் இராணுவ புரட்சி ஏற்படும் என்று கூறியதாக விக்கிலீக்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்டது உண்மைதான் என்று நம்பவேண்டியதாக இருக்கிறது பேராயர் ரஞ்சித்தின் இப்போதைய அறிவிப்பை பார்க்கும்போது.....
இரண்டாயிரம் வருசங்களுக்கு முன்னர் முள்முபடி தரிக்க வைத்து, பாரச்சிலுவை காவிட செய்து, சவுக்கால் அடித்து, தேவனின் குமாரன் கல்வாரி மலைக்கு கொண்டு செல்லப்படும் போது தமது வானக தந்தைக்கு விண்ணப்பித்தது போல ''தந்தையே, இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்'' என்று மன்னித்து மறந்துபோக எம்மால் முடியாது.
எனினும் வரலாற்றின் சில பக்கங்களை தெரிந்து கொள்ளுதல் நலம் என்பதற்காக சிலவற்றை இதோ தருகிறோம்...
இன்று பேராயர் மல்கம் ரஞ்சித் கூறிய அதே கருத்தையே இற்றைக்கு எழுபது வருடங்களுக்கு முன்னர் அரசியல்கூடாது என்று சொல்லிக் கொண்டு மௌனம் காத்ததால் இன்று வரைக்கும் வரலாற்றின் பக்கங்களில் மிக மோசமான ஒரு போப் ஆகவும் அவலமாக சித்தரிக்கப்படுகிறார் பன்னிரண்டாம் பயஸ் என்ற போப்.
மல்கம் ரஞ்சித் அவர்களும் அத்தகைய ஒரு மௌனத்தையா விரும்புகிறார்?? வரலாற்றை திரும்பி பார்ப்பது அனைவர்க்கும் நல்லதுதான்.
ஆட்சிக்கு வந்ததுமே யூத இனத்தின் மீதான அனைத்து வன்மங்களையும் சட்டமாக ஆக்குகிறான் கிட்லர். 1939ல் திடுதிப்பென்று இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியதுமே கிட்லர் நிலைமையை தனக்கு சாதகமாக ஆக்கி கொண்டு யூதர்களை மானுட எதிரிகள் என்று அறிவிக்கின்றான்.
அப்போதும் வத்திகானின் போப் மௌனம். அரசியலாக்ககூடாது என்ற பெரு மௌனம். அதுவே கிட்லருக்கு இன்னும் துணிவையும், ஏன் என்று கேட்க யாருமே இல்லை என்ற தைரியத்தையும் கொடுத்து அவன் தொடர்கிறான்.
இயல்பாகவே மிகமிக அதிகமாக கத்தோலிக்கர்களை மக்களாக கொண்ட ஜேர்மனியில் எப்போதும் மக்கள் மத்தியில் வத்திகானின் போப் அவர்களின் செய்திகளுக்கும் கருத்துக்கும் ஒரு உயரிய இடம் உண்டு.
யூதர்களை மானுட எதிரிகளாக கிட்லர் அறிவித்தபோதே எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் ஒருவேளை யூதபடுகொலைகளை தடுத்திருக்கலாம் அல்லது குறைத்தே இருக்கலாம். ஆனால் பன்னிரண்டாம் பயஸ் அப்படி செய்யவில்லை. ஏனெனில் அரசியல் வேண்டாம் என்று.
1941ல் யுத்தத்தின் அனைத்து சாதகங்களும் வெற்றிகளும் உறுதிப்படுத்தப்பட்டதும் கிட்லர் இறுதித் தீர்ப்பு ஒன்றை யூத மக்களுக்கு கொடுக்கிறான். ஐரோப்பா முழுதும் பரந்து வாழும் யூதர்களை ஒன்றுதிரட்டி படுகொலை செய்து முற்றாக துடைத்தெறிவது என்று..
அதற்கு முதல் யூதர்களின் மனிதவலு முழுவதையும் பலாத்காரமாக பெற்று கொள்ளும் கட்டாய உழைப்பு முகாம்களில் அடைப்பது என்றும் கிட்லர் தீர்மானிக்கிறான். அப்போதும் பன்னிரண்டாம் பயஸ் என்ற புனித தந்தை கடும் மௌனம்.
ஆஸ்விட்ஸ், டச்சாவ், புசன்வோல்ற், செம்னோவ், பெல்செக், மெடானொக் போன்ற தடுப்பு (கொலை) முகாம்களில் 24 மணிநேரமும் விச அறைகளில் யூதஇன படுகொலை நடந்தேறியது.
ஐரோப்பா முழுதும் இருந்து தொடரூந்துகளில் கொண்டுவரப்பட்டவர்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டார்கள். ஏறத்தாள 38லட்சம் யூதர்கள் இவ்வாறு விசஅறைகளுள் கொல்லப்பட்டார்கள்.
16 லட்சம் ‌யூதர்கள் கட்டாய உழைப்பு மையங்களில் நோயினாலும் உணவின்றியும் கொல்லப்பட்டார்கள். எல்லமாக 53 லட்சம் யூத இன மக்கள் கொல்லப்பட்டார்கள். அப்போதும் பன்னிரண்டாம் பயஸ் மௌனமாகவே இருந்தார்.
இவை எல்லாவற்றினதும் உச்சமாக, 1943 அக்டோபர் 16ம்திகதி மனுக்குல வரலாற்றின் மிக அவமான நாள். அந்த நாளில் இறைமகன் கிறிஸ்துவின் போதனைகளை பரப்ப என்றும், கடவுளின் பிரதிநிதியாக போப்பாண்டவர் இருக்கும் வத்திகானுக்குள்ளேயே நாசிக்கள் புகுந்து யூதர்களை இழுத்து சென்றார்கள்.
கிறிஸ்தவர்களாக மதம் மாறிய யூதர்களைகூட நாசிக்கள் விடவில்லை. மத நம்பிக்கை மாறினால் என்ன யூத இரத்தம் மாறாது என்று சொல்லியே யூதர்களை இழுத்து சென்றார்கள்.
இவற்றுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் ஏராளம் பாதிரியார்களும், ஆயர்களும் துணிவுடன் போராடினாலும்கூட மிகமிக உயர்மட்டமான போப்பாண்டவர் பன்னிரண்டாம் பயஸ் மௌனமாகவே இருந்தார்.
வத்திகானுக்குள் அந்த நாளில் மட்டும் அதிகமான பெண்கள், குழந்தைகள் உட்பட 1007 யூதர்கள் பிடிக்கப்பட்டார்கள்.
அவர்கள் உடனடியாகவே அஸ்விற்ஸ் முகாமுக்கு அனுப்பப்பட்டு அவர்களில் 811 பேர் உடனடியாகவே விசவாயு அறைக்கு கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
அப்போதும் பன்னிரண்டாம் பயஸ் ஏனோ மௌனம்தான். கடவுளின் பிரதிதிநிதி என்ற ஸ்தானத்தில் அமர்ந்திருந்த பன்னிரண்டாம் பயஸ் ஒரு கண்டனம், ஒரு எதிர்ப்பு தனது குரலில் தெரிவித்து இருந்தால் அது இறை நம்பிக்கை மிகுந்த ஜேர்மனிய மக்கள் மத்தியிலும், கிட்லரின் படை மத்தியிலும் ஏராளம் எதிர்ப்புகளை நிச்சயமாக தோற்றுவித்து இருக்கும்.
இந்த யுத இன அழிப்பு ஒருவேளை தடுக்கப்பட்டும் இருக்கும். ஒரே ஒரு அறிவிப்பு வத்திகானின அதிகாரபுர்வமான வானொலியில் இந்த யூத இனபடுகொலைகளை நிறுத்துங்கள் என்று அறிவித்திருந்தால் வரலாறு வேறுவிதமாக மாறி இருக்கலாம்.
அரசியல் வேண்டாம் என்ற மௌனம் எவ்வளவு மானுட கொலைகளை அனுமதித்து இருக்கிறது பன்னிரண்டாம் பயஸின் மௌனத்தால்.
கம்யூனிசத்துக்கு எதிரான சக்தியாக விளங்கும் கிட்லரை விமர்சித்தால், கண்டித்தால் எங்கே கம்யூனிசம் ரஸ்யாவில் இருந்து ஐரோப்பா முழுதும் வந்துவிடுமோ அதனால் திருச்சபை கலைந்துவிடுமோ என்ற பயம்தான் அவரின் மௌனத்துக்கான காரணம்...
ஆனால் பன்னிரண்டாம் பயஸின் மௌனம் என்பது வரலாற்றின் மிக மோசமான ஒரு துரோகம். மௌனம்கூட ஒருவிதத்தில் அநீதிகளுக்கான அங்கீகாரம்தான். அது மட்டுமல்லாமல் அவர் இந்த படுகொலைகளில் இறந்தவர்களின் ஆத்மாசாந்தி அடைய பிரார்த்தனைகளைகூட நடாத்த ஒத்துகொள்ளவில்லை.
அதுமட்டுமல்லாமல், கிறிஸ்துவர்களாக மாறி குருமார்களாகவும், கன்னியாஸ்திரிகளாகவும் இருந்து வத்திகானில் இருந்து நாசிகளால் இழுத்து செல்லப்பட்டவர்களுக்காககூட மதச்சடங்குகளை செய்ய ஒத்துக்கொள்ளவில்லை என்பதுதான் மிகப்பெரிய அவலம்.
யூத படுகொலைகளை கண்டிக்க மறுத்ததற்காக போப்பாண்டவர் பன்னிரண்டாம் பயஸ்க்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதத்தை வத்திகானுக்கான ஜேர்மனிய துாதர் 1943 அக்டோபர் 28ம்திகதி வழங்கி கௌரவிக்கிறார். மௌனத்துக்கு பரிசு??
அரசியல் வேண்டாம், அரசை கண்டித்தால், அல்லது அரசுமீது பேரர்க்குற்றச்சாட்டு, விசாரணை என்று புறப்பட்டால் ஜனநாயகம் கெட்டுவிடும், இராணுவ புரட்சிவரும் என்று சொல்லி சொல்லியே தமிழ் இனப்படுகொலையை பற்றி கதைக்கவோ கண்டிக்கவோ மறுப்பவர்கள் பன்னிரண்டாம் பயஸ் போன்றவர்களே... அப்போது கம்யூனிசபுச்சாண்டி காட்டி போப்பாண்டவர் இனப்படுகொலைக்கு மௌன அங்கீகாரம் வழங்கினார்.
இன்று சீனா வந்துவிடும் என்று யூச்சாண்டி காட்டி காட்டியே மகிந்தவை காப்பாற்றுகிறார்களா? அவர்கள் எல்லோருக்கும் சேர்த்தே உலகின் மிகப்பெரும் விஞ்ஞானியும், சார்பியல் தத்துவத்தின் தந்தையுமான ஐன்ஸ்ரின் ” இந்த யூத இன அழிப்பை மௌனமாக பார்த்து கொண்டிருக்கும் அனைவரும் நாளை வரலாற்றின் முன்னால் குற்றவாளிகளாக நிற்க வேண்டி இருக்கும் ” என்று கூறினார். 

தீர்கதரிசனம்: மகா பாபிலோன் விழுந்தது காண்க காணொளி