சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்த வேண்டும்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்த வேண்டும்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீர்ப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய நியமிக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளதோடு ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் கருத்தும் அவ்வாறான தன்மையில் அமைந்துள்ளதன் அடிப்படையில் அவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்க முடியும் என்று தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது வாராந்த கேள்வி பதில் அறிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவரது கேள்வி பதில் அறிக்கை வருமாறு, இவ்வாரக் கேள்வி கொழும்பில் இருந்து வந்துள்ளது. கேள்வி பின்வருமாறு.

பத்திரிகையாளர் கேள்வி :- அடுத்த வாரம் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. அது பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில் :- 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 30/01 என்ற பிரேரணை ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்டது. அதன் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு பல கடப்பாடுகள் இருந்தன. அவற்றை நிறைவேற்ற இரண்டு ஆண்டு காலம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவற்றை நிறைவேற்றாமலேயே இலங்கை அரசாங்கம் இருந்து வந்தது.

கடந்த மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியது. பொறுப்புக்கூறலை உள்ளடக்கிய நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை உருவாக்குவதற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் அதன்போது வழங்கப்பட்டது. இலங்கையின் அனுசரணையைப் பெறுவதற்காக மேற்கு நாடுகள் அந்தப் பிரேரணையின் காரத்தை பெருமளவுக்குக் குறைத்தன என்பது உங்களுக்குத் தெரியும். சர்வதேச சமூகம் தற்போதைய இலங்கை ஆட்சியாளருக்குச் சாதகமான முறையிலேயே அப்போது இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அப்படியும் அரசாங்கம் அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை.

இப்போது ஒரு வருடம் கடந்துவிட்டது. அடுத்தவாரம் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் ஆரம்பமாகின்றது. ஆனால் இந்த ஒரு வருடத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் எவை நிறைவேற்றப்பட்டன?

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு இப்போது ஒன்றரை வருடங்கள் சென்றுவிட்டது. இன்னும் அது செயற்படத் தொடங்கவில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் கைவாங்கப்படவில்லை. அந்தக் கொடூரமான சட்டத்தின் கீழ் கைதான பலர் இன்னமும் தடுப்பில் உள்ளனர். பலர் சம்பந்தமாக வழக்குகள் பதியப்படவில்லை. சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இனநெருக்கடிக்கான அரசியலமைப்பு மூலமான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையும் தற்போது இல்லை என்றே கூறலாம். நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளையடுத்து கூட்டரசாங்கம் அதனை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்பதே யதார்த்தம்.

இந்த நிலையில் சர்வதேசம் என்ன செய்யப்போகின்றது? சர்வதேசத்தின் அழுத்தங்களால் மட்டுந்தான் இங்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழர்களுக்கு நீதியைக் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது. அமெரிக்காவில் இருந்து வந்த நிஷா பிஸ்வால் அவர்களிடம் ஐ.நா மீண்டும் இருவருடங்கள் தவணை கொடுப்பதைப் பற்றி எனது ஆட்சேபணைகளை சென்ற வருட ஆரம்பத்தில் தெரிவித்த போது தமிழர்களை ஒரு போதும் அமெரிக்கா கைவிடாது என்றார். இப்பொழுது அவரும் பதவி இழந்துவிட்டார்.

எமது பெரும்பான்மையின அரசாங்கம் நெருக்குதல் இல்லாவிட்டால் ஒரு போதும் எமது உரிமைகளைத் தரமுன்வராது என்பதே எனது கருத்து. நியாயமான முறையில் போர்க் குற்றங்களை விசாரிக்க அரசாங்கம் முன்வராது. எந்தளவுக்கு நெருக்குதல்களை பிற அரசாங்கங்கள் உண்டு பண்ணுவன என்பது நாம் அவர்களுடன் சேர்ந்து பேசி ஏற்படுத்த வேண்டியதொன்று. காலங் கடந்தால் “ஆறின கஞ்சி பழங்கஞ்சி” ஆகிவிடும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீரப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய நியமிக்கப்பட வேண்டும் என்று ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் கருத்தின் அடிப்படையிலேயே அவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்க முடியும் என்று கருதுகின்றேன்.