மத்திய அரசுடன் மோதமுடியும்! – முதலமைச்சர்

மத்திய அரசுடன் மோதமுடியும்! – முதலமைச்சர்

நாங்கள் இராணுவத்தை ஒட்டுமொத்தமாகக் குறை கூறவில்லை. அதில் கடமையாற்றிய காவாலிகள் சிலரை அடையாளப்படுத்த வேண்டும் என்றே கேட்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் “இடைக்கால அறிக்கை – மாயைகளை கட்டுடைத்தல்” என்னும் தலைப்பில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சர்வதேச சட்டம் பலவழிகளிலும் விரிவடைந்து வருகின்றது என்பதை அவதானிப்போம். சர்வதேச சட்டம் என்றாலேயே பாரம்பரியமாகவோ, உடன்பாடுகள் மூலமாகவோ ஒன்று சேர்ந்த ஒரு தொகை விதிகளையே அடிப்படையில் அதுகுறிப்பிடும். இந்த விதிகளைக் கொண்டு நாடுகள் தம்மிடையேயான உறவுகளை வளர்க்கும் போது விதிகள் சட்ட அந்தஸ்து பெறுகின்றன. அண்மைக் காலங்களில் பல முக்கிய மாற்றங்கள் சர்வதேசச் சட்டத்தில் ஏற்பட்டுள்ளன. பலநாடுகளில் ஏற்பட்ட நெருக்கடிகள், அவற்றினால் உலக மக்கள் மனதில் ஏற்பட்ட தாக்கங்கள் போன்றவை இந்த மாற்றத்திற்குக் காரணம் ஆகிவிட்டன.

1983ம் ஆண்டு ஜுலை மாதத்தில் எமது அப்போதைய பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன் அவர்கள் மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்தார். அம் மாதம் 23ஆம் திகதிக்கு பின் வந்த நாட்களில் இலங்கையில் நடைபெற்ற கொடூரமான நிகழ்வுகள் தொலைக்காட்சி ஊடக ஒளிபரப்பப்பட்டு வந்தன. அதுபற்றி அவர் பின்னர் என்னிடம் கூறியபோது “எமது நாடு அந்தக் காலகட்டத்தில் நாறியது” என்றார். “வெட்கப்படுகின்றேன்” என்றார்.

அவ்வாறு நாடுகளில் நடந்தவற்றைப் பார்த்த சட்ட வல்லுநர்கள் பலர், சர்வதேச ச்சட்டத்தை விரிவாக்க வேண்டும் என்று எண்ணிய காரணத்தாலேயே சர்வதேசச் சட்டம் இப்போது விரிவடைந்த நிலையில் உள்ளது. இதன் பிரதிபலிப்பே உலகக் குற்றவியல் நீதிமன்ற ஏற்பாடு. அதுமட்டுமல்ல நிலைமாற்றத்தின் போது பாதிப்புக்குள்ளான நாடுகள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி இப்பொழுதுவலுவான கருத்துக்கள் தோன்றியுள்ளன. நிலைமாற்றம் என்றால் என்ன? ஒருநாட்டின் அரசியல் நிலையில், யதார்த்தநிலையில் மாற்றம் ஏற்படுவதையே அதுகுறிக்கின்றது. ஒரு இருண்ட காலத்தினுள் இருந்து வெளிச்சத்தை நோக்கி எட்டிப்பார்ப்பதையே நிலைமாற்றம் குறிக்கின்றது.

எனவே நிலைமாறும் நாடுகள் நீதிக்குகந்ததாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளே நிலைமாற்ற நீதிமுறைகள் ஆவன. இதையே Transitional Justice என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். கஷ்ட நிலையில் இருந்து ஒருநாடு மீண்டுவரும் போது என்னென்ன நடவடிக்கைகளை நீதிக்குகந்ததாக அந்நாட்டில் எடுக்கவேண்டும் என்று சர்வதேச சட்டம் எதிர்பார்க்கின்றதோ அவற்றையே நிலைமாற்ற நீதிமுறைகள் என்று குறிப்பிடுகின்றது சர்வதேசச்சட்டம்.யாரோ அடக்கி ஆளப்பட்டதால்த்தான் அந்நாட்டில் வன்முறை வெடித்திருக்க வேண்டும் அல்லது கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிலைமாற்ற நீதிமுறைகள் இரண்டு முக்கிய எதிர்பார்ப்புக்களை முன்னிறுத்தியுள்ளன.ஒன்று அதிகாரப் பரவலாக்கம் மற்றது போர்க் குற்றவாளிகளைத் தண்டித்தல். இவற்றைச் சர்வதேசச் சமூகம் இலங்கையிலும் எதிர்பார்க்கின்றது. போர் முடிவுக்கு 2009ல் வந்திருப்பினும் இனப்பிரச்சனை அதனால்த் தீர்க்கப்படவில்லை.

அதனால்த்தான் அதிகாரப் பரவலாக்கம் தேவையுடையதாகின்றது. தற்போதும் 13வது திருத்தச்சட்டம் அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்தியேயுள்ளது. ஆனால் அது பெரும்பான்மையினரின் பெருந்தயவை முன்வைத்தேயாக்கப்பட்டுள்ளது.அதனால் தான் 1992இன் 58வது இலக்கச் சட்டமான மாவட்ட செயலாளர்கள் பற்றிய அதிகாரமாற்றச் சட்டத்தை இயற்றக் கூடியதாக இருந்தது. ஒற்றையாட்சி எனும் போது முன்னர் கொடுத்த அதிகாரங்களைப் பறித்து இவ்வாறான சட்டங்களைக் கொண்டுவரலாம்.

காரணம் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரம் பெரும்பான்மையினரின் கைவசமே தொடர்ந்திருக்கும். மாகாணசபைகளின் அதிகாரத்தின் கீழிருந்த மாவட்டச் செயலர்கள் திடீரென்று இந்தச் சட்டம் இயற்றப்பட்டதும் மத்திக்குரியவர்கள் ஆகிவிட்டார்கள். இதனால் இன்று வடமாகாணத்தில் இரட்டை நிர்வாகம் நடைபெற்று வருகின்றது. ஒன்று மக்களால்த் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண உறுப்பினர்களின் நிர்வாகம். மற்றையது மத்திய அரசாங்கத்தின் முகவர்களின் நிர்வாகம்.

இங்கு இரு முகவர்கள் சேர்ந்தும் சேராமலும் அவர்கள் நிர்வாகத்தை நடத்தி வருகின்றார்கள். ஆளுநரும் மத்தியின் முகவர். அரசாங்க அதிபரும் அவர்களின் முகவரே. ஆகவே அதிகாரப் பரவலாக்கம் என்ற போது நாம் எதிர்பார்த்தது நம்மை நாமே ஆண்டு வருவதையே. ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் என்ற போர்வையில் எமக்குக் கிடைத்தது வேண்டியபோது மத்தியின் ஊடுறுவல்களே. இவ்வாறு ஊடுறுவல்கள் தொடர்ந்து இருந்தால் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படப் போகின்றவர்கள் போருக்கு முன்னர் பாதிக்கப்பட்ட அதேமக்களே. இதனால்த்தான் ஒற்றையாட்சியைக் களைந்து சமஷ்டி ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று கேட்டுவருகின்றோம்.

இடைக்காலவரைவுகள் ஒற்றையாட்சியினையே மையமாகக் கொண்டு வரையப்பட்டதால்த்தான் சர்வதேச நாடுகள் போதிய அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர். இப்பொழுது இன்றைய பேச்சாளர்களின் பேச்சுக்களின் கருப்பொருட்களின் ஒன்றுக்கொன்றான தொடர்பானது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். சர்வதேசச் சட்டம் எதிர்பார்ப்பதைத்தான் ஐக்கிய நாடுகள் கூறியுள்ளன.

ஆர்ஜென்டீனா சர்வாதிகாரத்தில் இருந்து வெளிவந்த போது யுகோஸ்லாவியா, றுவண்டா மற்றும் கம்போடியா போன்ற நாடுகளின் உள்நாட்டுப் போர்களில் இருந்து அவைவிடுபட்ட போது நிலைமாற்ற நீதிமுறைகள் என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகள் தடைகளை விதித்தன.உலகக் குற்றவியல் மன்றத்தை உருவாக்குவதில் ஐக்கிய நாடுகள் கரிசனைகாட்டின. ஆகவே சர்வதேசச் சட்டம் நிலைமைக்கேற்றவாறு, சூழலுக்கேற்றவாறுமாறுதல் அடைந்து வந்துள்ளது.

எனவேதான் சர்வதேசச் சட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் நிலைமாற்ற நீதிமுறைகள் என்று எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலும் போர்க்குற்ற விசாரணையும் எமக்கு முக்கியமாகியுள்ளன. இரண்டையுந் தட்டிக்கழிக்கவே இலங்கை அரசாங்கம் முற்பட்டுள்ளது. அதிகாரப் பரவலில் நாம் எதிர்பார்க்கும் சுதந்திரம் எமக்கு மறுக்கப்படவிருக்கின்றது. மத்தியின் மையத்தினுள் மாகாணத்தை தொடர்ந்துவைத்திருக்கவே அரசாங்கம்மும் முரம் காட்டுகின்றது.

ஆனால் எம்முள் சிலரோ “அதற்கென்ன நாங்கள் கொழும்பில்த்தானே வசிக்கின்றோம், மத்திய அரசாங்கம் இங்குதானே இருக்கின்றது, நாம் இங்கு சுதந்திரமாக எப்படியும் வலம் வரலாம், ஆனால் மக்களுக்குச் சுதந்திரம் கொடுத்தால் எமது சுதந்திரம் பறிபோய்விடும், எனவே அரசாங்கம் சாட்டையைத் தன்கைவசம் வைத்திருப்பதை நாம் வரவேற்கின்றோம்” என்ற பாணியில் நடந்து வருகின்றார்கள்.

அவர்களின் நடவடிக்கை காலாகாலத்தில் வடகிழக்குத் தமிழ் பேசும் மக்களின் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிடும் என்பதை அவர்கள் உணர்கின்றார்கள் இல்லை.ஒற்றையாட்சியால் எமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி இடங்கள் பறிபோகப் போகின்றன. படைகள் தொடர்ந்து எம் மாகாணங்களில் நிலைநிற்கப்போகின்றன. எம் காணிகளின் வருமானங்கள் அவர்கள் கைவசம் செல்லவிருக்கின்றன.

மகாவலி சட்டத்தின் கீழ்மேலும் மேலும் வெளியிலிருந்து மக்களை எமது மாகாணத்தினுள் கொண்டுவந்து குடியேற்ற இருக்கின்றார்கள். சுற்றுலாவை தமக்குச் சாதகமாக வளர்த்துக் கொள்ளவிருக்கின்றார்கள். எம்மக்களின் தொகைக் குறைவினால் திணைக்களங்களில் தென்னவரை நிலைநிறுத்தி வருகின்றார்கள். இந்த நிலை தொடரும். முன்னேற்றம் என்றபோர்வையில் எமதுகாணிகளைச் சுவீகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.

இன்னும் பலதையும் கூறலாம். சமஷ்டி அரசியலின் கீழ் சுயாட்சிச் சுதந்திரம் அதிகாரப்பரவலாக்கல் மூலம் எமக்குக் கிடைத்தால் இவற்றைத் தடுத்துநிறுத்தலாம். ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் அவைதடுக்கப்படமுடியாது.ஐக்கிய நாடுகள் முன், தாமே முன் வந்து செய்வதாக ஏற்றுக்கொண்டவற்றை இன்றுசெய்யப் பின் நிற்கின்றது எம் நாட்டின் அரசாங்கம்.

அடுத்து போர்க்குற்ற விசாரணைகளையும் நிலைமாற்ற நீதிமுறைமைகள் வலியுறுத்துகின்றன.அதைத் தட்டிக்கழிக்கப் பார்க்கின்றது எமது அரசாங்கம். போர்க்குற்றங்கள் எத்தகையன என்பது பற்றியெல்லாம் பேராசிரியர் சுவர்ணராஜா அவர்கள் விளக்கப்படுத்தினார். போரை அநியாயமான முறையில் வேண்டுமென்றே நடத்துவது போர்க்குற்றம்.

அடுத்து மனித குலத்திற்கெதிரான செயல்களில் ஈடுபடுவது போர்க்குற்றம். மூன்றாவது வேண்டுமென்றே இன அழிப்பில் ஈடுபடுவது போர்க்குற்றம். மூன்றிலும் எமது அரசபடைகள் ஈடுபட்டிருந்தன. அக்குற்றவாளிகளை இனங்காண எமது மத்திய அரசாங்கம் பின் நிற்கின்றது. இனப்படுகொலை பற்றிய விளக்கமும் அண்மைக் காலங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

பர்மாவில் றோகின்தியாகொலைகள், ஈராக்கில் யாசிடியரின் வன்புணர்வு நிகழ்ச்சிகள் இனப்படுகொலையின் அம்சமே என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே இன்றைய பேச்சுக்களால் நாம் முக்கியமான இரு விடயங்களைப்புரிந்துள்ளோம்.

சர்வதேசச் சட்டம் விரிவடைந்துள்ளதால் எமது அல்லல்களும் அழிவுகளும் அதனுள் அடங்குவன என்ற முறையில் சர்வதேசச் சட்டத்தை ஒரு கேடயமாக ஏந்தி மத்திய அரசுடன் மோதமுடியும் என்பது.

அடுத்து இல்லாததை இருப்பதாகக் கூறி இனிவருங்காலத்தில் இருப்பதையும் இல்லாததாக்க நாம் உடன்படக்கூடாது என்பது.ஆகவே சர்வதேசச் சட்டம் எதிர்பார்க்கும் நிலைமாற்ற நீதிமுறைமைகளின் கீழ் முறையான அதிகாரப் பரவலாக்கத்தை முயன்றுபெற நீங்கள் அனைவரும் முன்வரவேண்டும்.நிலைமாற்ற நீதிமுறைமைகளின் கீழ் போர்க்குற்றவிசாரணைகளாவன சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிக் குற்றவாளிகளை அடையாளங்காண வேண்டும்.

நாங்கள் இராணுவத்தை ஒட்டுமொத்தமாகக் குறை கூறவில்லை. அதில் கடமையாற்றிய காவாலிகள் சிலரை அடையாளப்படுத்த வேண்டும் என்றே கேட்கின்றோம்.அந்தக் காவாலிகளை வீரதீரசூரர்கள், சிங்கள மக்களின் காவல் மன்னர்கள் என்ற முறையில் மத்திய அரசாங்கத்தில் உள்ளோர் பலர் காப்பாற்ற விளைந்துள்ளார்கள்.

எமது நெருக்குதல்கள் காவாலிகளைக் கடைத்தெருவுக்கு இழுத்துவர வேண்டும் என்று கருதுகின்றோம். இவற்றைச் செய்ய நாம் மக்கள் இயக்கமாக ஒருங்கிணைந்து முன்னேற வேண்டும் என்றுகேட்டுக் கொள்கின்றேன். எமது பார்வை சரியென்று கருதும் யாவரும் எம்முடைய மக்கள் இயக்கத்துடன் இணைந்து, அரசாங்கத்திற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நெருக்குதல்களை ஏற்படுத்த முன்வரவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.