என்ன செய்யப் போகிறார் இலங்கை ஜனாதிபதி சிறிசேன?

என்ன செய்யப் போகிறார் இலங்கை ஜனாதிபதி சிறிசேன?

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படுகின்ற கடுமையான விமர்சனங்கள் குறித்து கோபமடைந்திருக்கும் நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளிடையே கூர்மையடைந்து வருகின்ற முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

அமைச்சரவைக்கு தலைமை தாங்குகிற ஜனாதிபதி வெளியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களை ஆட்சேபித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்த முதல் சம்பவம் இதுவாகத்தான் இருக்கவேண்டும்.

அரை மணி நேரத்துக்கும் கூடுதலான நேரம் உரையாற்றிவிட்டு வெளியே சென்ற ஜனாதிபதியைப் பின்தொடர்ந்து வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இரு பிரதான கட்சிகளையும் சேர்ந்த மூத்த அமைச்சர்களும் அவரைச் சமாதானப்படுத்தி, அழைத்து வந்ததாகவும் அவர் அமைதியாக மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியதாகவும் அறியக்கூடியதாக இருந்ததுமுன்னதாக ஜனாதிபதி சிறிசேன தனது உரையில், மத்திய வங்கி பிணைமுறிகள் கொள்வனவில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஆணைக்குழுவை தான் நியமித்தது, ஐக்கிய தேசிய கட்சியை மாசுபடுத்தவே என்று நினைப்பதனாலேயே அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னைத் தாக்குகிறார்கள் என்று கூறினார்.

தேநீர் குடிக்கவே வெளிநடப்பு செய்தாரா?

அடுத்தடுத்த நாட்களில் இந்தச் சம்பவம் குறித்து தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசிய ஜனாதிபதி சிறிசேன, தேநீர் குடிக்கவே அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து வெளியே சென்றதாகக் கூறினர்.

அதன் பிறகு, அமைச்சரவையின் முடிவுகளை அறிவிப்பதற்காகக் கூட்டப்படுகின்ற செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அரசாங்கப் பேச்சாளர்களில் ஒருவரான சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி கழிப்பறைக்குத்தான் சென்றார் என்று கூறியதையும் நாட்டு மக்களில் எவரும் நம்பியதாகக் கூறமுடியுமா? அவ்வாறு கழிப்பறைக்கு ஜனாதிபதி சென்றிருந்தால் அரைமணி நேரமாக அங்கே என்ன செய்தார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்தியாளர்கள் மத்தியில் கேள்வியெழுப்பி பகடிசெய்ததும் காணக்கூடியதாக இருந்தது.ஜனாதிபதி சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து வருடங்களே என்றும் அந்தப் பதவிக்காலம் 2020 ஜனவரி 9 ஆம் திகதி நிறைவுபெறுகிறது என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்து இரண்டு நாட்கள் கழித்து அவர் அமைச்சரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.

தனது பதவிக்காலம் குறித்து வேறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்படுவதால் குழப்பமான நிலையைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று கூறிய ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் அரசியலமைப்பு அடிப்படையிலான விளக்கத்தைக் கேட்டிருந்தார்.ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாகக் குறைக்கும் அரசியலமைப்புக்கான 19 வது திருத்தச் சட்டம் 2015 ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே, அதாவது 2015 ஜனவரி 8ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற சிறிசேன, மறுநாளே ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

அவர் தேர்தலில் போட்டியிட்டவேளையில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு ஏற்பாட்டின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களே. அதனால் மக்கள் அவரை 6 வருட பதவிக் காலத்துக்கே தெரிவு செய்தனர் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தனது வியாக்கியானத்தை முன்வைத்தார். ஆனால், அந்த வாதத்தை, ஐந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளும் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டனர். சட்டமா அதிபரின் வாதம் ஜனாதிபதி சிறிசேன 2021 ஜனவரி 9 வரை பதவியில் தொடரமுடியும் என்பதேயாகும்அமைச்சரவையில் தனது ஆவேச உரையில் பதிலளித்த ஜனாதிபதி, என்றென்றைக்கும் ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்காக தான் பதவிக்கு வரவில்லை என்றும் எந்த நேரத்திலும் பதவியைத் தூக்கியெறிந்துவிட்டுப் போகத்தயாராயிருப்பதாகவும் குறிப்பிட்டார். உயர் நீதிமன்றத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.

நாகரிக அரசியல் கலாசாரம்?

இந்த நிகழ்வுப் போக்குகள் எல்லாமே இரு வருடங்களுக்குப் பிறகு ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் என்னவாயிருக்கும் என்ற கேள்வியை எழுப்பி நின்ற நிலையில் அவரோ கடந்த சனிக்கிழமை தலைநகர் கொழும்புக்கு வெளியே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உள்ளூராட்சி தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் சகல ஊழல் மோசடிக்காரர்களையும் குற்றவாளிகளையும் நரகத்துக்கு அனுப்பிவைத்துவிட்டு, நாகரிகமான அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவித்த பிறகே ஜனாதிபதி பதவியில் இருந்து இறங்கப்போவதாகச் சூளுரைத்தார்.

ஜனாதிபதி சிறிசேனவின் இந்தப் பேச்சுக்கள் எல்லாம் அவர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்துவிட்டு 2015 ஜனவரி 9 மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்த உடன், அங்கிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது செய்த பிரகடனத்தை தவிர்க்க முடியாமல் நினைவுபடுத்துகின்றன.இன்னொரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அவர் அன்று கூறினார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதென்ற தனது தேர்தல் வாக்குறுதியை விரைவாக நிறைவேற்றுவதில் தனக்கு இருக்கும் உறுதிப்பாட்டையே அவர் அந்தப் பிரகடனத்தின் மூலமாக நேர்மையாக வெளிக்காட்டினார் என்றே பலரும் நம்பினார்கள்.

ஆனால், ஜனாதிபதி சிறிசேனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தங்களது வேட்பாளர் என்று சுதந்திர கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பல மாதங்களாக தொடர்ந்து கூறிவருகின்றபோது அவரோ சூட்சுமமான ஒரு மௌனத்தைச் சாதித்து வருகிறாரே தவிர, வெளிப்படையாக மறுக்கவில்லை. இது அவரது அரசியல் நேர்மையைக் கடுமையான சந்தேகத்துக்குள்ளாக்குகிறதுசில தினங்களுக்கு முன்னர்கூட நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன அரசியலமைப்பு மாற்றப்படாமல் தற்போதுள்ளவாறே தொடர்ந்து இருக்குமானால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையும் மாற்றப்படாமல் இருக்குமானால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சிறிசேன நிச்சயம் போட்டியிடுவார் என்று கூறினார்.

இவையெல்லாவற்றையும் பார்க்கும்போது, 2020 ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக சிறிசேன போட்டியிடுவாரா, இல்லையா என்பது தெளிவற்றதாக இருக்கிறது.

நாட்டு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை மதித்து, எஞ்சியிருக்கும் இரு வருட காலத்துக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் மூலமாக ஒழிக்க அவரால் இயலுமா என்ற கேள்வியையும் கேட்கவேண்டியிருக்கிறது.மூன்று வருடங்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றி மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாதிருக்கத் தீர்மானிப்பாரேயானால், ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்வி எழுகிறது.

வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடத் தீர்மானிப்பாரேயானால், அவரின் அரசியல் நம்பகத்தன்மை அடிபட்டுப்போகும்.

அதேவேளை மீண்டும் தேர்தல் அரசியலில் பங்கேற்காதிருக்க சிறிசேன முடிவெடுத்தால் இன்னும் இருவருடங்களில் பதவியில் இருந்து இறங்கப்போகின்றார் என்பதை நன்கு தெரிந்துகொண்டபின்னர் சுதந்திர கட்சியைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக அதிகாரத்தையும் பதவிவழியான வரப்பிரசாதங்களையும் அனுபவிப்பதிலேயே எப்போதும் குறியாக இருக்கின்ற அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எவ்வளவு காலத்துக்கு அவருக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

ராஜபக்சவுடன் நிற்கும் எம்.பி.க்கள்

சுதந்திர கட்சியின் உத்தியோகபூர்வ தலைவராக ஜனாதிபதி சிறிசேன இருக்கிறபோதிலும், தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பிரிவினருக்கே அவர் நடைமுறையில் தலைவராக இருக்கிறார். மற்றைய பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிரணி என்று செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50க்கும் அதிகமானவர்கள் ராஜபக்சவுடனேயே அணிசேர்ந்து நிற்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை விடவும் கூடுதலானதாகும்.ராஜபக்சவுடன் நிற்பவர்கள் கட்சித் தலைமையின் எச்சரிக்கையையும் மீறி உள்ளூராட்சி தேர்தல்களில் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

சுதந்திர கட்சியின் தலைமையை மீண்டும் கைப்பற்ற முடியாமல் போகுமேயானால் தங்களது எதிர்கால அரசியல் வாகனமாக ராஜபக்ச சகோதர்களும் பிள்ளைகளும் இந்தப் புதிய கட்சியையே பயன்படுத்துவார்கள். தற்போதைக்கு அதன் பெயரளவிலான தலைவராக முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் 'அமர்த்தப்பட்டிருக்கிறார்'ஜனாதிபதி சிறிசேனவின் இடத்தில் சுதந்திர கட்சியின் தலைமைக்கு வருவதற்கு தேசிய ரதியில் ஏற்புடைய அரசியல்வாதியொருவர் இல்லாத நிலையில் அந்த கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தலைமைக்காக ராஜபக்ச சகோதரர்களை நோக்கியே ஓடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஜனாதிபதி சிறிசேன தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்பது உறுதியாகுமேயானால் இப்போது அவருடன் நிற்கும் அரசியல்வாதிகள் அவரைக் கைவிட்டு ஓடுவார்கள் என்பது நிச்சயம். ஏனென்றால், அவர்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தை உறுதிசெய்வதிலேயே அக்கறையாயிருப்பார்கள்.

அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியினரைப் பொறுத்தவரை அவர்கள் சுதந்திர கட்சியுடனான அரசியல் சக வாழ்வைத் தொடருவதில் இனிமேலும் அக்கறை காட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் அடுத்து மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகளும் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஜனாதிபதியின் கட்சிக்கும் இடையிலான உறவு நிலையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று நம்பலாம்.

ஜனாதிபதியைக் கண்டனம் செய்து பேசவேண்டாம் என்று பிரதமர் விக்கிரமசிங்க இப்போது தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறுவதைப் போன்று முன்பு ஜனாதிபதியும் பிரதமரை விமர்சிக்கவேண்டாம் என்று சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இரு தலைவர்களுக்கும் இடையே சஞ்சலத்துடன் கூடிய ஒருவித புரிந்துணர்வு இருப்பதென்பது உண்மையென்றாலும் அடுத்து வரும் மாதங்களில் ஐக்கிய தேசிய கட்சியினர் தங்களது தலைவரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறவைப்பதற்கான வியூகங்களை வகுக்கவேண்டியிருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது சகவாழ்வு சீர்குலைவதற்கான வாய்ப்புக்களே அதிகம் என்று தோன்றுகிறது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டிடுவதென்பது பிரதமர் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை மிகவும் அவசியமானதாகும். அவரின் அரசியல் எதிர்காலம் அதில் தங்கியிருக்கிறது. மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நழுவ அவர் முயற்சிப்பாரேயானால் கட்சியில் தனது தலைமைத்துவத்தைக் காப்பாறுவதற்கு அவரால் இயலாமல் போகும்.
கடந்த மூன்று வருடங்களாக நாட்டின் பொருளாதார விவகாரத்தைக் கையாளும் பொறுப்பை ஐக்கிய தேசிய கட்சியிடம் ஒப்படைத்திருந்ததாகவும் இனிமேல் அந்த விவகாரத்தை தானே கையேற்கப் போவதாகவும் ஜனாதிபதி வார இறுதியில் கூறியிருந்தார். இது நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சியுடன் அவருக்கு பெரும் முரண்நிலையைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.

நாடாளுமன்றத்தை கலைக்க முடியாமை

முன்னைய ஜனாதிபதிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆசனங்களைக் கொண்டிருந்த கட்சிகளுடன் முரண்பாடுகள் தீவிரமடைந்த சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய பொதுத் தேர்தலுக்கு உத்தரவிடுவதற்கு தங்களது அதிகாரங்களைப் பயன்படுத்தினர். முந்தைய அரசியலமைப்பு ரீதியான ஏற்பாட்டின்படி, ஒரு நாடாளுமன்றம் முதன் முதலாகக் கூடிய தினத்தில் இருந்து ஒரு வருடம் கடந்த பின்னர் அதைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது.ஆனால், அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்துக்குப் பிறகு அவ்வாறு செய்யமுடியாது என்றாகிவிட்டது. நாடாளுமன்றத்தின் ஐந்து வருட பதவிக் காலத்தில் நாலரை வருடங்கள் கடந்த பின்னரே நாடாளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்கமுடியும்.

சிறிசேனவின் தற்போதைய பதவிக்காலம் 2015 ஜனவரி 9 முடிவடையும்போது நாடாளுமன்றம் அதன் பவிக்காலத்தில் நாலரை வருடங்களுக்கும் குறைவான காலத்தையே பூர்த்திசெய்திருக்கும். அதனால், தனக்கு அரசியல் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் முடியாத பலவீனமான நிலையே அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

எனவே, தனது பதவிக்காலம் தொடர்பாக குழப்பநிலை இருப்பதாகக் கூறி உயர் நீதிமன்றத்தின் விளக்கத்தைக் கேட்கப்போய் இறுதியில் அரசியல் ரீதியில் தனது அதிகாரத்தை முனைப்புடன் செயற்படுத்த முடியாத ஒரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக (Lame duck president) சிறிசேன தன்னை ஆக்கிக்கொண்டுவிட்டாரோ என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது.

அவ்வாறான சூழ்நிலையைத் தவிர்க்க அல்லது தடுக்கக்கூடிய அளவுக்கு போதுமான அரசியல் நுண்மதியும் சூழ்ச்சித் திறனும் தன்னிடமிருக்கிறது என்று அவரால் நிரூபிக்கமுடியுமா?