ஆங்கிலம் கதைக்க சிரமமாக இருக்கின்றதா? கவலையை விடுங்கள்

ஆங்கிலம் கதைக்க சிரமமாக இருக்கின்றதா? கவலையை விடுங்கள்

தற்காலத்தில் ஆங்கில மொழியின் அவசியத்தையோ அல்லது அதன் ஆதிக்கத் தன்மையையோ யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
உலகத்தை சிறிய கூடைப்பந்தின் அளவிற்குச் சுருக்கி விட்ட இந்தக் கணினி கணத்தில், செவ்வாய்க்கு ரோவரை (Rover) அனுப்பும் விஞ்ஞான யுகத்தில், ஆங்கில மொழியின் சேவை அளப்பரியது.
அதன் தேவை அளவிட முடியாதது. உலகத்தின் மொழியாகவும், நவ நாகரீகத்தின் வழியாகவும் ஆங்கிலம் பார்க்கப்படுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை.
ஆங்கிலத்தை கேட்பதற்கும், பேசுவதற்குமான பயிற்சி முறைகள்
  • நல்ல தரமான ஆங்கில அகராதியை சொந்தமாக எப்போதும் கூடவே வைத்திருங்கள். அதன் மூலம் தினம் குறைந்தது பத்துப் புதிய சொற்களாவது அறிந்து கொள்ளுங்கள். இதற்காக English to Tamil அகராதியை விட Tamil to English அகராதியே அதிகம் பயன் தரக்கூடியது.
  • பேச முற்படும் முன் நிறைய ஆங்கிலப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டே இருங்கள்.விளையாட்டு வர்ணனையை செவிமடுத்துக் கேட்கலாம். உதாரணமாக கிரிக்கட் வர்ணனை. இதன் மூலம் பல புதிய அழகிய வார்த்தைகளைக் கேட்கலாம்.அர்த்தம் புரியாவிட்டால், அகராதியின் உதவியுடன் அவ் வார்த்தைகளின் அர்த்தங்களைத் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் ஆங்கிலத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் (English pronunciation), எப்படி உச்சரிக்கக் கூடாது என்பதனையும் கற்றுக் கொள்ளலாம்.
  • உங்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாவிட்டால், விளம்பர வாசகங்கள், கடைகளின் தட்டிகள், படம் போட்ட சிறுவர் கதை நூல்கள் போன்றவற்றை வாசிக்கத் தொடங்கலாம். HINDU போன்ற உயர் தர ஆங்கில இதழ்கள், அகரமுதலிகளை எடுத்த எடுப்பிலேயே புரட்டுவது மட்டும் ஆங்கிலம் பேச உதவாது.
  • தமிழ் தெரியாத பிற மொழி நண்பர்களிடம் பேச்சு கொடுத்துப் பழகுங்கள். இந்தச் சூழ்நிலைகளில் உங்கள் பேச்சுப் பிழைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள். நீங்கள் பேசுவது அவருக்குப் புரிந்தாலே வெற்றி தான்.
  • சரியோ தவறோ பேசத் தொடங்குங்கள். பேசவே தொடங்காமல் ஆங்கிலம் தெரியவில்லையே என்று வருந்துவதில் பயனில்லை. நீங்கள் எவ்வளவு கூடுதலாகவும் அடிக்கடியும் வெவ்வேறு விசயங்களைப் பேசிப் பழகுகிறீர்களோ அவ்வளவு விரைவில் பேச்சு ஆங்கிலம் கைக்கூடும்.
  • நன்கு தெரிந்தவர்களிடம் குறை ஆங்கிலத்தில் பேசக் கூச்சமாக இருந்தால், முன் பின் தெரியாத இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு, ஒரு வாடிக்கையாளர் சேவையைத் தொலைபேசியில் அழைக்கும் போது ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு இருந்தால் பேசிப் பாருங்கள்.
  • சிறுவர்களுக்கான ஆங்கில நிகழ்ச்சிகள், கார்டூன்களை ஆழ்ந்து கேட்கலாம், பார்க்கலாம்.சிலர் கிண்டல் செய்வார்கள். Never Mind It.
  • Discovery போன்ற Channelகள், News Channelகள் மற்றும் ஆங்கிலப் படங்களை Sub Title உடன் பாருங்கள் ஆங்கில செய்தித்தாள்கள், ஆங்கில சஞ்சிகைகள், ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் என்பவற்றை தெளிவாக உரத்துப் படியுங்கள். இதன் போது பொருள் தெரியாத, உச்சரிக்க தெரியாத செற்களை அகராதிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
  • உங்களுக்குள் நீங்களேயோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்தோ ஆங்கிலத்தில் கதைத்துப் பழகலாம். பிழைகள் வரும்; வந்தால் நல்லது, ஏனென்றால் நீங்கள் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. முயற்சி செய்கின்றீர்கள்!
  • On line இல் கிடைக்கும் இலவச ஆங்கிலப் பயிற்சி நெறிகளையும் முயற்சித்துப் பார்க்கலாம்.
  • தினமும் குறைந்தது 5 வசனங்களாவது நீங்களே முயற்சித்து எழுதுங்கள்