ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவை மூன்று முட்டாள்கள் குழு

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக  இலங்கை 
அரசியல்வாதிகள்  தெரிவித்த கருத்துக்களின்  தொகுப்பு

1 )   ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவை மூன்று முட்டாள்கள் குழு என்று அமைச்சர் விமல் வீரவன்ச பரிகாசம் செய்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் மூன்று முட்டாள்கள் குழுவானது இலங்கையில் மேற்கத்தேய நாடுகளுக்குச் சார்பான பொம்மை அரசாங்கமொன்றை நிறுவுவதற்கான சதித்திட்டங்களுக்குத் துணை போயுள்ளதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டுகின்றார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட் ஆலோசனை பெறுவதற்கான குழுவொன்று தாம் தயாரித்த அறிக்கையை செயலாளர் நாயகம் படித்துப்பார்க்க முன்பதாகவே வெளியிட்ட சம்பவம் வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும்.
மூன்று முட்டாள்கள் குழுவின் அங்கத்தவர்கள் மூவரும் பணத்துக்காக விலைபோகக் கூடியவர்கள் என்பது மிகவும் பிரசித்தமான விடயம். அதிலும் குழுவின் தலைவர் தருஸ்மன் பற்றி சொல்லவே தேவையில்லை. ஏனைய இருவரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நீண்ட காலம் தொடக்கம் செயற்பட்டவர்கள். அப்படியான குழுவின் அறிக்கை நோ்மையான முறையில் இருக்கும் என யாரும் கருதவே முடியாது.
இலங்கைக்குள் இன்னொரு நாட்டை ஏற்படுத்துவதுடன், இலங்கை அரசாங்கத்தை தமது இஷ்டம் போல ஆட்டி வைக்கும் மேற்கத்தேய நாடுகளின் சூழ்ச்சியையே அவர்கள் தங்கள் அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2 ) ஐக்கிய நாடுகள் சபைப் பொதுச்செயலாளரின் நிபுணர் குழுவின் அறிக்கை ஒரு புனைகதை என்று வர்ணித்துள்ளது இலங்கை அரசு. அத்துடன் ஐ.நாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தும் எந்த உள்நோக்கமும் அரசுக்குக் கிடையாது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை இலங்கை அரசு அடியோடு நிராகரித்தாலும் அதனால் ஏற்படப் போகும் விளைவுகளை எதிர்கொள்வதற்கான இராஜதந்திரப் போரை அது ஆரம்பித்துள்ளது.
அதன் முதற்கட்டமாக வெளிநாட்டுத் தூதர்களை நேற்றுக் காலையில் இரண்டாவது தடவையாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்தித்து நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை விளக்கினார்.
பக்கச்சார்பானது!  வன்மம் பாராட்டுவது!  பரபரப்பான புனைகதை நோக்கி வழிப்படுத்துவது என்று அப்போது நிபுணர் குழுவின் அறிக்கை பற்றிப் அமைச்சர் பீரிஸ் பொரிந்து தள்ளினார்.
அதேசமயம், இத்தகைய ஒரு அறிக்கையை விடுத்ததற்காக ஐ.நாவுக்கு எதிராகச் செயற்படும் எண்ணம் எதுவும் அரசுக்குக் கிடையாது என்றும் அமைச்சர் கூறினார்.
வெளிநாடுகளையும் ஐ.நா. சமூகத்தையும் இழிவுபடுத்துவதன் மூலமோ வன்செயல்கள் மூலமோ சிறுமைப்படுத்தும் எண்ணம் எதுவும் எமக்குக் கிடையாது. இப்போதுள்ள பதற்றமான சூழலில் அரசியல் லாபம் தேடும் நோக்கோடு செயற்படுபவர்களே அத்தகைய தகவல்களைப் பரப்பி வருகிறார்கள் என்றார் பீரிஸ்.

3 ) புலிகளைச் சுதந்திரப் போராளிகள் என்றும் உலகத்திலேயே ஒழுக்கமானவர்கள் என்றும் தெரிவித்துள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் தருஸ்மன் அறிக்கையை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது? இப்படி அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று கேள்வி எழுப்பினார்.
அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை தகவல் திணைக்களக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பான அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கையில் கூறியவை வருமாறு:
நிபுணர் குழுவின் அறிக்கையின் 8 ம் பக்கத்தில் புலிகள் சுதந்திரப் போராளிகள், உலகிலேயே மிக ஒழுக்கமானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தவர்கள், பிக்குகளை, பள்ளிவாசலில் பிரார்த்தனை செய்தவர்களைப் படுகொலை செய்தவர்கள் ஒழுக்கமானவர்களா?இந்த அறிக்கை உண்மைக்குப் புறம்பானது.
இப்போது நாட்டில் ஏற்பட்டுவரும் இன ஒற்றுமை, நல்லிணக்கம், அபிவிருத்தி ஆகியவற்றைத் தலைகீழாக மாற்றும் நோக்கிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகக் கொடூரமான பயங்கரவாதிகள் புலிகள் என்றும், அவர்கள் அல்கொய்தாவை விட மோசமானவர்கள் என்றும் தெரிவித்து அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை தமது நாடுகளில் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தன.
தற்போது இதே நாடுகள் தமது பிரதிநிதிகள் மூலம் இப்படியான ஓர் அறிக்கையை வெளியிடச் செய்துள்ளன. அத்துடன் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்தும்படியும் கோருகின்றன.
ஐ.நா. அறிக்கை தொடர்பாக அரசு தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் விளக்கமளிக்கும்.
இதேவேளை, இன, கட்சி, நிற பேதமின்றி உள்நாட்டிலுள்ள சகல கட்சிகளையும் அமைப்புகளையும் இணைத்துக்கொண்டு இந்தப் பிரச்சினைக்கு அரசு முகம் கொடுக்கும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.