மக்கள் பிரச்சினைக்காக தேர்தலில் குதிக்கிறேன்: டுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி

மக்கள் பிரச்சினைக்காக தேர்தலில் குதிக்கிறேன்: டுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி

டுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி

மக்கள் பிரச்சினைக்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குதிக்கிறேன் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார்.

மக்கள் பிரச்சினைக்காக தேர்தலில் குதிக்கிறேன்: விஷால் பரபரப்பு பேட்டி
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், சசிகலா அணி சார்பில் தினகரன், பாரதீய ஜனதா சார்பில் கரு.நாகராஜன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஷால் போட்டியிட போவதாக நேற்று திடீர் என்று அறிவித்துள்ளார். அவர், நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து நடிகர் விஷால் பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்:-

கேள்வி:- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது என திடீர் முடிவு எடுத்தது ஏன்?

பதில்:- தேர்தலில் போட்டியிடுவது எனக்கு புதிது அல்ல. நான் கல்லூரியில் படித்த காலத்திலேயே கல்லூரி மாணவர் தேர்தல்களில் போட்டியிட்டேன்.

அதேபோல் நடிகர் சங்க தேர்தலிலும், தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். இப்போது ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறேன். இதிலும் வெற்றி பெறுவேன். நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

கே:- நீங்கள் அண்ணா நகர் தொகுதியில் வசிக்கிறீர்கள். ஆனால், சம்பந்தம் இல்லாத ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறீர்களே?

ப:- ஆர்.கே.நகருக்கு நான் வெளி நபர் அல்ல. 2015-ல் வெள்ளம் வந்த போதும், வர்தா புயலின் போதும் இங்கு முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டேன். மக்கள் நிச்சயம் இதை மறந்து இருக்க மாட்டார்கள். நான் அடிமட்டத்தில் இருந்து பணியாற்றுவேன்.

கே:- தேர்தலில் போட்டியிட முடிவு எடுப்பதற்கு முன்பு சீனியர் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்களிடம் கலந்து ஆலோசித்தீர்களா? அவர்களுடைய வழிகாட்டுதலை பெற்றீர்களா?

ப:- நான் யாரிடமும் இதுபற்றி கலந்து ஆலோசிக்கவில்லை. இது, நான் சுயமாக எடுத்த முடிவு. அதே நேரத்தில் நடிகர் கமல்ஹாசன் ஆசியை கேட்டு பெறுவேன். அவர் எனக்கு அரசியல் துணிச்சலை ஏற்படுத்தியவர். 2 தடவை என்னை வேட்பாளராக முன்மொழிந்து வெற்றி பெற செய்தவர்.

முதலில் நடிகர் சங்க தேர்தலிலும், அடுத்து தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் என்னை நிறுத்தி வெற்றி பெற வைத்தார். 2 தேர்தலிலும் அவருடைய ஆசியால் வெற்றி கிடைத்திருக்கிறது. இப்போதும் அவரது ஆசியை பெற்றால் நல்லது நடக்கும். அதே நேரத்தில் கமல்ஹாசனுடன் இது வரை நான் அரசியல் சம்பந்தமாக பேசியது இல்லை.

கே:- ஆர்.கே.நகர், அரசியல் ரீதியாக பற்றி எரிந்து கொண்டு இருக்கும் நேரத்தில் நீங்களும் அதில் குதித்ததற்கு என்ன காரணம்?

ப:- இங்கு நிலவும் சூழ்நிலையால்தான் தேர்தலில் குதிக்க வேண்டும் என்ற முடிவை நான் எடுத்தேன். மக்கள் பிரச்சினைக்காக தேர்தலில் போட்டியிடுகிறேன். நான் மக்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் நிற்கிறேன். எந்த கட்சிக்கும் எதிராக போட்டியிட வில்லை.

கே:- என்ன வி‌ஷயத்தை மனதில் வைத்து தேர்தலில் குதித்து இருக்கிறீர்கள்? தயாரிப்பாளர்கள் கந்து வட்டி பிரச்சினையில் சிக்கி தவிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து தேர்தலில் குதித்தீர்களா? அல்லது வேறு ஏதேனும் மனதில் உள்ளதா?

ப:- நான் திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்கிறேன். அதன் பிறகு அனைத்து விவரங்களையும் சொல்வேன். இப்போது நான் தேர்தலில் வெல்ல வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள்.

கே:- அரசியல்வாதிகள் மீது ஏற்பட்டுள்ள கோபம் தான் உங்களை அரசியலில் ஈடுபட வைத்துள்ளதா?

ப:- ஒரு மாற்றம் கட்டாயமாக தேவைப்படுகிறது. மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது.

கே:- ஆர்.கே.நகரில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறப்படுகிறதே?

ப:- இந்த வி‌ஷயத்தில் இப்போது தேர்தல் கமி‌ஷன் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.