மாம்பழம் விற்றவர், இன்று கோடிகளில் புரளுகிறார்

மாம்பழம் விற்றவர், இன்று கோடிகளில் புரளுகிறார்



பாரத் விகாஸ் குழுமம் (பிவிஜி) இரண்டாயிரம் கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனமாகும். இந்தியாவின் 12 மாநிலங்களில் 22 கிளைகள் இந்நிறுவனத்துக்கு உள்ள நிலையில் சுமார் 500 நிறுவனங்கள் இவர்களின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். 70,000 பேருக்கும் மேல் வேலை செய்கிறார்கள். பிவிஜி-யின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரின் பெயர் ஹனுமந்த் கெய்க்வாட் (45). மகாராஷ்டிராவில் உள்ள ரஹிமத்பூர் என்ற சிறிய கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் இவர் பிறந்தார். ஆறாம் வகுப்பு வரை தனது வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில் எண்ணெய் விளக்கில் தான் ஹனுமந்த் படித்தார். பின்னர் இவர் குடும்பம் புனேவுக்கு குடிபெயர்ந்தது, நீதிமன்ற குமாஸ்தாவாக இருந்த ஹனுமந்த் தந்தைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட குடும்பத்தில் வறுமை ஏற்பட்டது. இதையடுத்து ஹனுமந்தின் அம்மா நகைகளை விற்று செலவுகளை சமாளித்தார், இவரோ படித்து கொண்டே மாம்பழம் விற்றார். ஒரு டஜனுக்கு 3 ரூபாய் கிடைத்தது, பின்னர் உயர்பள்ளிப்படிப்பில் 88% மதிப்பெண்கள் பெற்ற ஹனுமந்த், தாய் வாங்கிய 15000 ரூபாய் கடன் உதவியுடன் பி.டெக் பட்டப்படிப்பில் சேர்ந்தார். படிக்கும் போது வீடுகளுக்கு வர்ணம் பூசும் ஆர்டர்களை அடுத்து பத்து வேலையாட்களை வைத்து செய்தார். இதில் மாதம் 5000 வருமானம் வந்தது. சமூகத்துக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் கடந்த 1993-ல் பாரத் விகாஸ் பிரதிஷ்தான் என்ற லாபநோக்கமற்ற தொண்டு நிறுவனத்தைத தொடங்கினார். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவதே நிறுவனத்தின் நோக்கமாகும். படிப்பின் இறுதி ஆண்டில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் பலேவாடி அரங்கில் நடப்பதாகக் கேள்விப்பட்டார். அங்கு நடைபாதையை சரிசெய்யும் 3 லட்ச ரூபாய் ஒப்பந்தத்தை ஹனுமந்த் பெற்றார்.
பி.டெக் முடித்ததும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அவர் தண்டமாகக் கிடந்த பழைய பொருட்களைப் பயன்படுத்த ஒரு வழி கண்டதன் மூலம் நிறுவனத்துக்கு 2 கோடி ரூபாய் சேமித்துக்கொடுத்தார். பின்னர் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹனுமந்துக்கு தோட்டவேலை, மின்சாரம், எந்திரத் துறைகளில் வேலைகள் செய்யும் ஒப்பந்தத்தை அளித்தது.இதையெல்லாம் தனது பாரத் விகாஸ் பிரதிஷ்தான் மூலம் அவர் செய்தார். பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இவர்களுக்குப் பணி ஒப்பந்தங்களை அளித்தன. கடந்த 1997-ல் பிவிஜி இந்தியா நிறுவனத்தை தொடங்கிய ஹனுமந்துக்கு முதல் ஆண்டில் 8 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்தது. இரண்டாம் ஆண்டில் 56 லட்சமாக அது உயர்ந்தது. இன்று பஜாஜ், மஹிந்திரா, அசோக் லேலண்ட், ஹுண்டாய், போக்ஸ்வாகன், பியட், போன்ற நிறுவனங்களுடன், ஓஎன் ஜிசி , ஐடிசி, ஹிந்துஸ்தான் லீவர், இந்திய ரயில்வே ஆகிய நிறுவனங்களுடனும் பிவிஜி நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறது. கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதே ஹனுமந்தின் மந்திரச்சொல்லாக உள்ளது.